அந்த ட்வீட்டை முதல்வர் ஏன் நீக்கினார்...? மோடி ஆசையும் அதுதானே என தமிழிசை விளக்கம்!

By Asianet TamilFirst Published Jun 5, 2019, 10:19 PM IST
Highlights

தென் இந்திய மொழிகளை வட இந்தியர்களும்; வட இந்திய மொழிகளை தென்னிந்தியர்களும் கற்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்குள் மொழி பரிமாற்றம் ஏற்படுவது தொடர்பாக பல முறை பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட ட்வீட்டை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லையே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றை பதிவு செய்தார். அதில், “பிற மாநிலங்களில் விருப்பப் பாடமாக கற்பிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் வகையில் இருந்த இந்த ட்வீட் பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கைக்கு எதிராக முதல்வர் பதிவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மாலையில் அந்த ட்வீட்டர் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
இந்நிலையில், “முதல்வர் அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லையே” என பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பதிவை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், அதேவேளையில் புதிய மொழி கொள்கையில் வரையறுக்கப்பட்டதுபோல தொன்மையான தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் கற்றுக்கொண்டால் அது மகிழ்ச்சியே. தென் இந்திய மொழிகளை வட இந்தியர்களும்; வட இந்திய மொழிகளை தென்னிந்தியர்களும் கற்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்குள் மொழி பரிமாற்றம் ஏற்படுவது தொடர்பாக பல முறை பிரதமர் மோடி பேசியுள்ளார்.” எனத் தெரிவித்தார். 
மேலும் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, “ தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வந்த நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை மாணவர்கள் முறியடித்துள்ளனர். நீட் தேர்வு தேர்ச்சி முடிவுகளில், தேசியளவில் தமிழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. வரும் ஆண்டுகளில் தமிழகம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.” என்று தெரிவித்தார்.  

click me!