அதிமுக என்ற ஊசிப்போன தோசை இன்று நான்காக இருக்கிறது. கால் பங்கு பழனிசாமியிடம், கால் பங்கு பன்னீரிடம், கால் பங்கு சசிகலாவிடம், கால் பங்கு தினகரனிடம். ஒரு ஒட்டுத் துண்டு தீபாவிடம். இதுதான் இன்றைய அதிமுக ஜெயலலிதாவுக்குப் பின்னால் கட்சிக்குத் தலைமை தாங்கிய பழனிசாமியின் கையாலாகாத்தனத்தின் அடையாளம்தான் இத்தனை உடைசல்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி தான் பழனிசாமியின் அரசியல் கிழிந்த ஜாதகம் ஆகும். இந்த லட்சணத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாது என்ற வெட்டிப் பேச்சு வேறு என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையகத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், ஆயிரம் மு.க. ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று அலறி இருக்கிறார் பழனிசாமி. ஆயிரம் பேர் எதற்கு? பழனிசாமி ஒருவரே போதாதா? அதிமுகவை அழிப்பதற்கு? என முரசொலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி
“அம்மா இறந்த நன்னாளில்...” என்று உறுதி எடுத்துக் கொண்ட சேலத்துச் சேக்கிழாரின் சமீபகால உளறலுக்கு அளவே இல்லை. தனது ஆட்சி காலம்தான் பொற்காலமாம். அதிமுகவை அழிக்க முடியாதாம். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறையும் போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. பழனிசாமி காலத்தில் ஆட்சி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் காலத்தில் தமிழக நாடாளுமன்றத்தின் அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கையில் வைத்திருந்தது. பழனிசாமி காலத்தில் 39 இல் ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோற்றார் பழனிசாமி. கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோற்றார் பழனிசாமி. இதுதான் பழனிசாமியின் அரசியல் கிழிந்த ஜாதகம் ஆகும். இந்த லட்சணத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாது என்ற வெட்டிப் பேச்சு வேறு.
அதிமுக என்ற ஊசிப்போன தோசை இன்று நான்காக இருக்கிறது. கால் பங்கு பழனிசாமியிடம், கால் பங்கு பன்னீரிடம், கால் பங்கு சசிகலாவிடம், கால் பங்கு தினகரனிடம். ஒரு ஒட்டுத் துண்டு தீபாவிடம். இதுதான் இன்றைய அதிமுக ஜெயலலிதாவுக்குப் பின்னால் கட்சிக்குத் தலைமை தாங்கிய பழனிசாமியின் கையாலாகாத்தனத்தின் அடையாளம்தான் இத்தனை உடைசல்கள். ஒரே ஒரு அதிமுகவை நான்கு அதிமுகவாக ஆக்கியதுதான் பழனிசாமியால் முடிந்த சக்தியாகும். சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றவர் பழனிசாமி. பதவிக்கு வந்ததும் தினகரனுக்காக ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வாக்கு கேட்டார். பின்னர் அவரை கழற்றி விட்டார். சசிகலாவின் காலை வாரினார். பன்னீர் செல்வத்துக்கு தூது அனுப்பி அவரைச் சேர்த்துக் கொண்டார். பாஜகவின் பாதம் தாங்கி நாற்காலியை வலிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் பன்னீரையும் கழற்றி விட்டார். இப்போது உடனிருப்பது அனைத்தும், தன்னைப் போலவே உதவாக்கரைகள். இத்தகைய தக்கைகளை வைத்துக் கொண்டு தலையால் நடந்து வருகிறார் பழனிசாமி. ஆனால் பேச்சு மட்டும், பண்ணையார்த்தனத்தின் பசப்புத்தனங்கள்.
இவரது கடந்த காலத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று பேசி வருகிறார். பழனிசாமியின் கொடூரத்தன்மைக்கு உதாரணம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. அமைதியாக ஊர்வலம் வந்த மக்களைக் கலைத்து சுடச் சொல்லிவிட்டு - தனது அதிகாரத்தை நிலைநாட்டி விட்டதாகக் குதூகலம் அடைந்த இரக்கமற்றவர் அவர். ‘எனக்குத் தெரியாதே! டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என்று மிக்சர் சாப்பிட்டவராகச் சொன்னவர் அவர்தான்.
அவர் ஆட்சியில்தான் தலைமைச் செயலாளரே ‘ரெய்டு’க்கு உள்ளானார். கோட்டையில் ‘ரெய்டு’ நடந்தது. அவரது ஆட்சியில் தான் டி.ஜி.பி.யே புகாருக்கு உள்ளானார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரியே பாலியலுக்கு உள்ளானார். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை நடந்தது பழனிசாமி ஆட்சியின் சாதனை ஆகும். கொலை நடந்தது, மர்ம மரணங்கள் நடந்தது, தற்கொலையும் நடந்தன. கஞ்சா வியாபாரிகளின் டைரிகளில் யார் பெயர் இருந்தது என்பதை மறக்கவில்லை மக்கள்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரமும் பழனிசாமி கால சாதனையாகும். அ.தி.மு.க. பிரமுகர்கள் தொடர்புடையது. புகார் கொடுத்தவரையே அ.தி.மு.க. பிரமுகர்கள் அடித்தார்கள். புகாருக்கு உள்ளானவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தைரியமாக பேட்டி கொடுத்தார். அந்த வழக்கின் சாட்சியங்களையே அழிக்கப் பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற விதியை மீறி அவர்களை அடையாளம் காட்டி காட்டிக் கொடுத்த ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சியாகும்.
பாதி பட்ஜெட்டை தனது துறைக்கு ஒதுக்கி- அது மொத்தத்தையும் தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் ஒதுக்கிக் கொண்டவைதான் உச்சநீதிமன்றத்திலும் – உயர்நீதிமன்றத்திலும் விசாரணையாக நடந்தனவே. 4000 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. பழனிசாமி காலத்தில்தான் சென்னை மிதக்குமே! எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அவர் வரமாட்டார். வந்து பார்க்க மாட்டார். அப்படியொரு அதிகார வர்க்க அம்பாசிட்டராக நடந்து கொண்டார். ஆனால் ஆண்டுதோறும் வெள்ளத் தடுப்புப் பணிக்காக பண ஒதுக்கீடுகள் மட்டும் செய்து கொள்வார்.
2016- – 2017 பட்ஜெட் அறிவிப்பு
“எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்கு விரிவான பாதுகாப்பு திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது. இத்திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 445.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”.
2018- – 2019 பட்ஜெட் அறிவிப்பு
“ மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கான விரிவான வெள்ளத்தடுப்பு வேலைத்திட்டம் முறையே 2,055.67 கோடி ரூபாய் மற்றும் 1,243.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது”
2020- – 2021 பட்ஜெட் அறிவிப்பு
”கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத் திட்டமாக, பெருநகர சென்னையில், விரிவான வெள்ளப் பேரிடர் தணிப்பு திட்டத்தினை 3,000கோடி ரூபாய் மொத்தச் செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது”. இவை அனைத்தும் செய்யப்பட்டு இருந்தால் சென்னையில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கி இருக்குமா? தேங்கி இருக்காது. இவை அனைத்தும் அ.தி.மு.க.வையும், தமிழ்நாட்டையும் பழனிசாமி பாதாளத்துக்குத் தள்ளியதன் ஒரு சில துளிகள் மட்டும்தான்.
அதனால்தான் ஜெயலலிதா ஆட்சியை சீரழிவு என்றும் பழனிசாமி ஆட்சியை பேரிடர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒற்றைச் சொல்லால் அடையாளப்படுத்தி இருக்கிறார் என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க;- திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர்.. ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்.!