நாங்குநேரியைப் பெற காங்கிரஸ் கறார்... உதயநிதி ஆசையை ஸ்டாலின் தீர்ப்பாரா?

By Asianet TamilFirst Published Jun 12, 2019, 6:33 AM IST
Highlights

 புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு அத்தொகுதியை ஒதுக்கியதுபோல, இங்கே நாங்குநேரியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டிவருகிறது. திமுகவும் அத்தொகுதியில் போட்டியிட விரும்புவதால், மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றி பெற்றார். இதனால், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். 
அந்தத் தொகுதிக்கு இன்னும் ஐந்தரை மாதங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியோடு சேர்ந்து, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்த சோளிங்கரில் திமுக போட்டியிட்டது. நாடாளுமன்றத்தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறுவதற்காக அப்போது சோளிங்கரை பெற காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை.


ஆனால், சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டதுபோல நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டிவருகிறது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இதை வெளிப்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் தரப்போ, அத்தொகுதியில் தாங்களே போட்டியிடுவோம் என்று வலியுறுத்திவருவதாக  கூறப்படுகிறது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு அத்தொகுதியை ஒதுக்கியதுபோல, இங்கே நாங்குநேரியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
வழக்கமான ‘இடைத்தேர்தல்’ பாணியில் தேர்தல் நடக்கும்பட்சத்தில், காங்கிரஸ் போட்டியிட்டால், அங்கே தோல்வியடைந்துவிடுமோ என்ற எண்ணம் திமுகவுக்கு உள்ளது. அதனால், திமுக போட்டியிட்டால், வெற்றி பெற்றுவிட முடியும் என்று அக்கட்சி கருதுகிறது. தற்போதைய நிலையில், நாங்குநேரி தொகுதி தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாங்குநேரியை ஸ்டாலின் ஓ.கே. சொல்லிவிட்டால், பூத் கமிட்டி அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 

click me!