அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக யார்..? பலமான வேட்பாளரை தேடும் அதிமுக!

By Asianet TamilFirst Published Apr 22, 2019, 8:43 AM IST
Highlights

செந்தில் பாலாஜியை வீழ்த்தும் வகையில் செல்வாக்குள்ள  நபரை வேட்பாளராக களமிறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்பவே வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அதிமுக வியூகம் வகுத்துவருகிறது. 
 அரவக்குறிச்சி தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக நின்று, வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. தினகரன் அணிக்கு சென்று எம்.எல்.ஏ. பதவியை இழந்த பிறகு திமுகவுக்கு மாறி அக்கட்சி வேட்பாளராக தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்.

 
கரூரில் மிகுந்த செல்வாக்குள்ள செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டிருப்பதால், அவரை எப்படியும் வீழ்த்த வேண்டும்; அதிமுகவுக்கு துரோகம் செய்த அவரை தோற்கடிக்க வேண்டும் என அதிமுக வியூகம் வகுத்துவருகிறது. பலமான வேட்பாளரான செந்தில் பாலாஜிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பதில் அதிமுக தலைமை தீவிர யோசனையில் மூழ்கியுள்ளது.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியை எதிர்த்து அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அரவக்குறிச்சிக்கு செந்தில் பாலாஜி வந்த பிறகு அவருக்கு எதிராகத் திரும்பியவர் செந்தில்நாதன். துணை சபாநாயகர் தம்பிதுரையின் தீவிர ஆதரவாளரான இவர், அரவக்குறிச்சியில் சீட்டு கேட்டு வருகிறார். இவருக்கு தம்பிதுரையும் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 
 கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியை ஓரங்கட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சியில் அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். அரவக்குறிச்சியில் தனது தம்பிக்கு சேகருக்கு சீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி உள்பட பல இடங்களில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற அதிமுக சார்பில் இஸ்லாமியர் ஒருவரை நிறுத்தவும் அதிமுகவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜியை வீழ்த்தும் வகையில் செல்வாக்குள்ள  நபரை வேட்பாளராக களமிறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்பவே வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!