மாநிலங்களவை எம்.பி.யாக ஆசை... திமுகவில் வரிசை கட்டும் சீனியர்கள்!

By Asianet TamilFirst Published May 28, 2019, 9:11 PM IST
Highlights

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சிறுபான்மையினர் நிறுத்தப்படவில்லை என்ற குறை இருந்துவருகிறது. எனவே அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஓர் இடத்துக்கு சிறுபான்மையினர் யாராவது நிறுத்தப்படுவார்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடைகிறது. அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுக்கு 4 இடங்களும் திமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதால், தற்போது திமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.


இந்த 3 இடங்களில் ஒரு சீட்டு மதிமுகவுக்கு வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி ஓர் இடம் வழங்கப்பட உள்ளது. அந்த இடத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய 2 இடங்களில் திமுகவினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்த இரு இடங்களை திமுக சார்பில் யார் பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவில் உள்ள சீனியர்களுக்கு இந்தப் பதவியைப் பிடிக்க ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தப் பட்டியலில் முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சிறுபான்மையினர் நிறுத்தப்படவில்லை என்ற குறை இருந்துவருகிறது. எனவே அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஓர் இடத்துக்கு சிறுபான்மையினர் யாராவது நிறுத்தப்படுவார்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!