மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் மம்தா பானர்ஜி….

By Selvanayagam PFirst Published May 28, 2019, 8:13 PM IST
Highlights

நாளை மறுநாள் நடைபெறும் மோடி பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது பரம வைரிகளாக செயல்பட்ட மோடி- மம்தா அதனை மறந்து விழாவில் பங்கேற்பது அரசியல் நாகரீகத்தை காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாகவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடனும் பேசியிருப்பதாகவும் மம்தா கூறினார்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமான கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தது திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையிலும் மம்தா, டெல்லி சென்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!