அடுத்தடுத்து மம்தாவுக்கு ஷாக் கொடுக்கும் மோடி !! கொத்துக் கொத்தாக பாஜகவில் இணையும் டிஎம்சி தொண்டர்கள் !!

By Selvanayagam PFirst Published May 28, 2019, 7:25 PM IST
Highlights

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  2 எம்.எல்.ஏக்கள், 50 கவுன்சிலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் உள்ளிட்ட ஏராளமானோர்  டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தனர். இதனால் மம்தா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி கடந்த 19-ந்தேதி முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குப்பதிவு நடந்த 542 தொகுதிகளில் 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றது.  

இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா  நாளை மறுநாள்  நடக்கிறது.மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் கால் பதித்துள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சுப்ரன்ஷூ ராய், துஷார்காந்தி பட்டாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தேவேந்திர ராய் ஆகியோரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த 50 கவுன்சிலர்களும் டெல்லியில் பாஜகவில் இணைந்தனர்.

பாஜக தலைவர் முகுல் ராய் மகன் சுப்ரங்சு ராய் திரிணாமுல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்.  கடந்த 25-ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2 எம்.எல்.ஏக்கள்,  50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தது மம்தா பானர்ஜிக்கு அரசியலில் மேலும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

மம்தா பானர்ஜியின் கட்சியில் அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்களை  பாஜக தன் பக்கம் இழுத்தது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ்  எம்.எல்.ஏக்கள் 40 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது 

click me!