உ.பி.யில் ஆட்சியை பிடிப்பது யார்? - ஆய்வில் ருசிகர தகவல்

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 09:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
உ.பி.யில் ஆட்சியை பிடிப்பது யார்? - ஆய்வில் ருசிகர தகவல்

சுருக்கம்

Who was driving rule in UP? - Interesting information in the study

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, அங்கு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், ‘தொங்கு சட்டசபை’தான் அமையும் எனவும் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

7 கட்ட தேர்தல்

நாட்டின் பிரதமரை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தொங்கு சட்டசபை

இதுவரை உள்ள தேர்தல் களத்தை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள், இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அணிக்கோ ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்புதான் உள்ளது என கணித்து இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது இதை உறுதி செய்து இருக்கிறார். தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பதால், தேர்தலுக்குப்பின் கூட்டணி குறித்து பேரம் பேசுவதற்கு சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முயற்சிப்பதாக அவர் விமர்சித்து இருந்தார்.

35 சதவீத ஓட்டுகள்

தற்போது, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் 35 சதவீத ஓட்டுகள் பெறுவது அவசியம்.

ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடந்த தேர்தலில் 29 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்ற சமாஜ்வாதி 226 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், 26 சதவீத ஓட்டுகளைப் பெற்ற மாயாவதியால் 80 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது.

எந்த ‘அலை’யும் இல்லை

அடுத்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, மாநில கட்சிகளை வீழ்த்திய பா.ஜனதா கூட்டணி 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை அள்ளியது. அந்த அணி பெற்ற வாக்கு சதவீதம் 42.

14 ஆண்டுகளாக தொங்கு சட்டசபைகளே அமைந்த உ.பி.யில், கடந்த 2007-ம் ஆண்டில்தான் முழுப் பெரும்பான்மை ஆட்சி அமைந்தது. ஆனால், இந்த ஆண்டில் எந்த ஒரு ‘அலை’யும் வீசவில்லை.

ரூபாய் நோட்டு விவகாரம்

இந்த தேர்தல் முடிவு, உ.பி.யில் யார் ஆட்சி அமைப்பது? என்பதை முடிவு செய்வதோடு, 2019-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது யார் பக்கம் காற்று வீசும்? என்பதற்கான உரைகல்லாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் என்பதற்கு, அரசியல் கட்சியினர் சொல்லும் முக்கிய காரணம், மாநிலம் தொடர்புடைய எந்த ஒரு முக்கிய பிரச்சினையும் முன்வைப்பப்படவில்லை என்பதுதான்.

ரூபாய் நோட்டு விவகாரம், பா.ஜனதாவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ மாறலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

முஸ்லிம் ஓட்டுகள்

முஸ்லிம் வாக்காளர்கள் சமாஜ்வாதியை ஆதரிப்பதா? அல்லது பகுஜன்சமாஜ் கட்சியை ஆதரிப்பதா? என்பதில் முடிவு எடுப்பதில் மிகவும் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் 100 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்தியதன் மூலம், அவர்களை ஈர்த்து இருக்கிறார்.

இதை தடுக்கும் வகையில், மாயாவதியை ஆதரித்தால் அவர் பா.ஜனதாவுடன் கை கோர்ப்பார் என, முஸ்லிம் வாக்காளர்களை அகிலேஷ் யாதவ் எச்சரித்து இருந்தார்.

முதல்வர் வேட்பாளரில் குழப்பம், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தாது, ரூபாய் நோட்டு விவகாரம் போன்றவை பா.ஜனதாவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து உள்ளது.

‘வானவில்’ கூட்டணி

மாயாவதி கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான 21.5 சதவீத தலித் ஓட்டுகள் அப்படியே அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

2007-ம் ஆண்டு தேர்தலில் தலித், முஸ்லிம் மற்றும் பிராமணர்களைக் கொண்ட ‘வானவில்’ கூட்டணி, மாயாவதியை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது.

தற்போது இந்த கூட்டணியும் சிதறிவிட்டது. அவர் கட்சியின் ‘பிராமணர்’ தலைவரான எஸ்.சி.மிஸ்ரா மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டாலும், இந்த தேர்தலில் மாயாவதி நம்பி இருப்பது முஸ்லிம் ஓட்டுகளைத்தான்.

மொத்தத்தில், இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தொங்கு சட்டசபைதான் அமையும் என்ற அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு சரியா? என்பது மார்ச் 11-ந்தேதி (ஓட்டு எண்ணிக்கை நாள்) தெரிந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?