துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? போலீஸ் தீவிரவாதிகள் போல் நடக்கிறார்கள் - டிடிவி ஆவேசம்...

First Published May 25, 2018, 7:04 AM IST
Highlights
Who ordered for shooting? Police behave like terrorists - ttv


தூத்துக்குடி 

காவலாளர்கள் தீவிரவாதிகள் போன்று நடந்து கொண்டுள்ளனர் என்றும் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்றும் தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ  நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதன்பிறகு  மருத்துவமனை முன்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீட்டுக்கு சென்றுவிட்டு ஆறுதல் கூறிவிட்டு இங்கு வந்துள்ளேன். 

பலியானவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறுகையில், "நாங்கள் மனு கொடுக்கத்தான் சென்றோம். அப்போது எங்களிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. அப்படி இருக்கும்போது காவலாளர்கள் குருவிகளை சுடுவது போன்று எங்களை சுட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என்று கேட்கின்றனர்.

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, "தேவையில்லாத காவலாளர்கள் தூத்துக்குடியில் இருக்கும் வரை நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். அவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றபோதே வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்களுக்கு காவலாளர்களே தீ வைத்துவிட்டு, நாங்கள் வைத்ததாக கூறுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடித்தான் ஆக வேண்டும். நீங்கள் எங்களுடனே இருக்க வேண்டும்" என்று கூறினர்.

"23 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். இதனை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இப்போது 12 பேரை சுட்டுக் கொன்றதாக கூறுகின்றனர். மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதுபற்றி விளக்கம் அளிக்கச் சொல்லுங்கள்" என்று கேட்கின்றனர். 

"துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் விழாக்களில் கலந்து கொள்வதை விட்டுவிட்டு தூத்துக்குடிக்கு வர வேண்டும். இங்குள்ள மக்களைவிட ஆட்சியாளர்கள், இலண்டனில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் நீடிக்கும் என்று உருக்கமாக" அந்த வாலிபர் கூறினார்.

மக்களின் நியாயமான கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் இங்குள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி நேரடி விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். 

காவலாளர்கள் தீவிரவாதிகள் போன்று நடந்து கொண்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் மக்கள் விடமாட்டார்கள். எங்களது கட்சி சார்பில், கலவரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியாக ஒவ்வொருவருக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கி உள்ளோம். துப்பாக்கி சூட்டில் பலியான 2 பேரின் வீட்டுக்கு சென்றோம். தலா ரூ.3 இலட்சம் கொடுத்துள்ளோம். 

மக்களின் கட்டளைக்கு ஏற்ப காவல்துறை தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் வரை இங்குதான் இருப்பேன்" என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

click me!