யார் இந்த பெ.மணியரசன் ?

First Published Jun 12, 2018, 11:54 AM IST
Highlights
Who is this Maniyarasan


நேற்று (ஜூன் 11, 2018) சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘தஞ்சையில் பெ.மணியரசன் அவர்களிடம் வழிப்பறி செய்ய முயன்றவர்களை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார் முதல்வர்.

ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெ.ம., அவர்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்தே அவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். அவரின் பையில் 600 ரூபாய் பணமும் சில ஆவணங்களும் மட்டுமே இருந்தது.

இதை வழிப்பறி செய்யவா வந்தார்கள்? சில நாட்களுக்கு முன்னர் பிரபல வாரப்பத்திரிகை ஒன்று பெ.மணியரசன் அவர்களை கைது செய்ய அரசு தீவிரம் காட்டுவதாகவும், அவருக்கு எதிராக வன்முறையில் சிலர் இறங்கியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே அவரை சிலர் தாக்கியுள்ளனர்’ என்கிறார்கள் அவரின் தோழமை அமைப்புகள்.

யார் இந்த பெ.மணியரசன்?

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியை பூர்விகமாக கொண்டவர் பெ.மணியரசன். கடந்த 50 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருபவர். ஆரம்ப காலங்களில் சி.பி.எம்., கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றி வந்தவர். சி.பி.எம்., கட்சியின் தஞ்சை மாவட்ட தலைமை பொறுப்பில் பதவி வகித்தவர் பெ.மணியரசன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக பணியாற்றியவர்.

1982 காலகட்டத்தில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தொடர்ந்து சி.பி.எம். கட்சியில் இருந்து விலகி தனி அமைப்பு ஒன்றை துவக்கி நடத்தியுள்ளார். அதுவே பின்னாளில் தமிழ்த் தேசிய பொதுவுடமை கட்சியாக உருமாறியுள்ளது. பின்னாளில் கட்சி என்கிற சொல்லை தவிர்ப்பதற்காக ‘தமிழ்த் தேசிய பேரியக்கம்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர் அமைப்பை சேர்ந்தவர்கள். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயலாற்றி வந்தனர் தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர்.

ஆரம்ப காலம் முதலே காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் எழுப்பி வருபவர் பெ.மணியரசன். சமீப காலமாக நடந்து வந்த காவிரி தொடர்பான போராட்டங்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதில் உள்ள அரசியலையும், சட்ட நுணுக்கங்களையும் கூறி பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

‘சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம் என அரசு அதிகாரத்திற்கு எதிராகவும் இந்துத்துவவாதிகளை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாகவுமே அவர் தாக்கப்பட்டிருக்கிறார்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

யாராக இருந்தாலும் வன்முறை என்பது அறவே கூடாது என்பதே அனைவரின் ஆசையும்.

click me!