
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்யும் விவகாரத்தில் பாஜக தலையிடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக-வை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி தரக்குறைவாக எழுதப்பட்ட பதிவை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இது பத்திரிக்கையாளர் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகருக்கு சென்னை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை நிராகரித்து நீதிபதி ஜெகதீஸ் சந்திரா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என தமிழக முதலமைச்சரிடமும், டிஜபியுடமும் கேளுங்கள் என தெரிவித்தார்.
எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு பாஜக எந்தவிதத்திலும் தடையாக இருக்காது என்று தெரிவித்த பொன்னார், தமிழக அரசால் காவல் துறையினர் மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.