எம்ஜிஆரின் வலது கரமாக இருந்து திமுகவில் இணைந்து மு.க.ஸ்டாலினின் முக்கிய ஆதரவாளராக உருவெடுத்தவர் தான் கு.க.செல்வம், கடந்த சில நாட்களாக. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலமானார்.
யார் இந்த கு.க.செல்வம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி அலுவலகம் வந்தால் அவரை சந்திக்க வேண்டும் என்றால் கு.க.செல்வத்தை தாண்டி தான் செல்ல வேண்டும் அப்படிப்பட்ட அவர். இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் யார் இந்த கு.க.செல்வம், இளம் வயதில் அரசியல் மீதான ஈடுபாட்டிற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
அதிமுக நிறுவனரும், பொதுச்செயலாளருமாக இருந்த எம்.ஜி.ஆருக்கு வலதுகரமாக இருந்தவர் ஜேப்பியார். ஜேப்பியாருக்கு நம்பிக்கைக்குரிய நபராக அறியப்பட்டவர் தான் இந்த கு.க.செல்வம். இந்த நட்பினால் எம்.ஜி.ஆரிடம் செல்வத்திற்கு அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட செல்வம், தினமும் காலையில் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்.
அதிமுக டூ திமுக
அந்த அளவிற்கு எம்.ஜிஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்து வந்தார். "ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் இருந்தால் அங்கு செல்வமும் இருப்பார்" என்று அதிமுகவினரே அப்போது சொல்வதுண்டு. அப்போது தான் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இதனால் ஜானகி அணியில் இருந்து கு.க.செல்வம் செயல்பட்டவர், ஜெயலலிதா வீடு முன் சாணி எரியும் போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்தாலும் கு.க.செல்வத்தை ஜானகி அணியாகவே பார்க்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அரசியலில் இருந்து விலகியவர், 1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது முதல் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரகவே இருந்து வந்தார்.
ஆயிரம் விளக்கு எம்எல்ஏ
சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியிலும் இம்மன்றம் செயல்படுகிறது. திமுக தலைமை நிலைய நிர்வாகிகளில் முக்கியமாக இருந்தவர் கு.க. செல்வம், எந்த நேரமும் அறிவாலயமே தனது கதி என இருந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வானார். இதனையடுத்து கட்சியில் மாவட்ட அளவில் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து, உதயநிதி சிபாரிசால் சிற்றரசுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
திமுக டூ பாஜக டூ திமுக
இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் எம்எல்ஏவாகவே இருக்கும் போதே, டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து சிறிது காலமே அங்கு இருந்தவர் மீண்டும் அறிவாலயமே தனது புகழிடம் என தெரிவித்து திரும்பி வந்தாரர். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த கு.க.செல்வத்திற்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் திமுகவில் தன்னை கு.க.செல்வம் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் இன்று தனது 70 வயதில் காலமானார்.
இதையும் படியுங்கள்
Breaking News : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்