அதிமுக தோற்க யார் காரணம்... திடுக் குற்றச்சாட்டை முன் வைத்த ஆர்.பி.உதயகுமார்..!

By Thiraviaraj RMFirst Published May 5, 2021, 12:45 PM IST
Highlights

அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது. ஐந்து முனை போட்டியில் மூன்று கட்சிகளையும் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர்

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அதிமுக தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி எழுபத்தைந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுகவில் இருந்த 27 அமைச்சர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ள நிலையில் 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி. அன்பழகன், கருப்பணன், காமராஜ், ஓ.எஸ். மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர். பி உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் என 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அதிமுக தோல்வியடைந்திருப்பதாக கருதுகிறோம். ஆட்சிக்கு தலைமை ஏற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கருதினோம். ஆனால், தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சேவையாற்ற மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு இன்னும் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதை உணர்த்துகிறது. கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களை காக்க புதிய அரசும், எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது. ஐந்து முனை போட்டியில் மூன்று கட்சிகளையும் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர்” என்றார்.

click me!