
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருச்சி வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுத்துறை நிறுவனங்கள் வரிசையாக தனியாரிடம் சென்றுவிட்டால் இடஒதுக்கீட்டை பின்பற்றவே முடியாது. அது சமூக நீதிக்கே எதிரானதாக அமைந்துவிடும். எனவே பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். திருச்சி 'பெல்' நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு நிறுவனம் ஆகும். எந்த வகையிலும் பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால், கேரள அரசை போல தமிழக அரசே அதன் 49 சதவீத பங்குகளை வாங்கி பெல் நிறுவனத்தை ஏற்க வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவின் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ஆகும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க எந்த அதிகாரமும் கிடையாது. காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பு, எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமேதான். அணை கட்டுவதை பற்றியெல்லாம் பேச எந்த அதிகாரமும் இல்லை. எனவே, இதில் தமிழக அரசு தலையிட வேண்டும். இந்த கூட்டம் நடைபெறாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் அதிமுக எண்ணிக்கை அடிப்படையில்தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசியும் அதை நிறைவேற்றவும் வைப்பது எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது. அந்த வகையில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி. இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது. "சனாதன தர்மம் குறித்த ஆளுநரின் பேச்சு குறித்து பழையதை பேச வேண்டாம். நாட்டில் தற்போது மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவைதான் தேவை. அதுகுறித்துதான் பேச வேண்டுமே தவிர. 2,000, 3,000 ஆண்டுகள் பழமையானது குறித்து பேசினால் எந்த பயனும் கிடையாது” என்று அன்புமணி ராமதாஸ்.
தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இந்த விஷயத்தில் அண்ணாமலை தீவிரமாகப் பேசி வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.