சென்னையின் அடுத்த பெண் மேயர் யார்..? 32 வார்டுகளில் குவியப்போகும் கவனம்.! தொடங்கியது அரசியல் சடுகுடு.!

By Asianet TamilFirst Published Jan 18, 2022, 8:42 PM IST
Highlights

தலைநகரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் உட்காரப் போகும் பெண் யாராக இருக்கும் ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், திமுகவில் உள்ள பிரமுகர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி தற்போதே அரசியல் வட்டாரத்தில் எழுந்துவிட்டது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தொடர்பாக விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேயர், தலைவர் பதவிகளில் பொதுப்பிரிவினருக்கு, மகளிருக்கு, பட்டியலினத்தவருக்கு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி சென்னை மாநகராட்சி மேயர் பதவி முதன் முறையாக பெண்களுக்கு மட்டுமல்லாமல், பட்டியலினத்துவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகர மேயராக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்தலுக்கு பிறகு வர உள்ளார்.

சென்னையில் மேயர் பதவியைக் கைபற்றப்போகும் பட்டியலின பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேயராகப் பதவியேற்கும் அந்தப் பெண், சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் என்ற சிறப்பையும் பெற உள்ளார். மேலும் மேயர் தேர்தல் மறைமுகமாக (வார்டு கவுன்சிலர்கள் மூலம்) நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 16 வார்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆண், பெண் போட்டியிடலாம். இன்னொரு 16 வார்டில் பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். அதன்படி பட்டியலின பொது பிரிவினருக்கு 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 என 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வார்டுகளில் இருந்துதான் ஒருவர் சென்னை மாநகராட்சி மேயராக வர முடியும். தலைநகரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் உட்காரப் போகும் பெண் யாராக இருக்கும் ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், திமுகவில் உள்ள பிரமுகர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் மேயர் வேட்பாளராக திமுகவில் பட்டியலின பெண்ணை அக்கட்சி தலைமை தேர்வு செய்துவிட்டதாகவும் மாறுப்பட்ட தகவல்களும் அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகின்றன. இந்த முறை வட சென்னையிலிருந்து மேயர் வேட்பாளர் வருவார் என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

click me!