அதிமுகவில் கோஷ்பூசல் வெடித்தது... ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்..!

By Asianet TamilFirst Published May 7, 2021, 9:59 PM IST
Highlights

அதிமுக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தலைவரைத் தேர்வு செய்யாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ள அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
அப்பதவியைப் பிடிக்க ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்று இக்கூட்டத்தில் இரு தரப்பும் வாக்கு வாதம் செய்தன. இதன் காரணமாக மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 9 மணியைத் தாண்டியும் முடிவு எடுக்க முடியாமல் நீண்டது. அதிமுக 66 தொகுதிகளில் வெல்ல எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஈபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி புகார் கூறின. இதனால், சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. 
இதற்கிடையே கூட்டத்தில் முடிவே எடுக்கப்படாமல், கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். அங்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யும் கூட்டம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் வலிமையான எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

click me!