எதிர்க்கட்சி தலைவர் யார்? எத்தனை முறை விட்டுக்கொடுப்பது-ஓபிஎஸ்.! ஈபிஎஸ்-ஓபிஎஸ் மோதல்; அதிமுகவில் கோஷ்டி பூசல்

By karthikeyan VFirst Published May 7, 2021, 9:34 PM IST
Highlights

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இருவருமே விட்டுக்கொடுக்க முன்வராததால், அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது.
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக மூத்த தலைவர்களான தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பலமுறை முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸுக்காக ஏற்கனவே முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து துணை முதல்வராக இருந்தது சுட்டிக்காட்டப்பட்டு, எத்தனை முறை தான் ஈபிஎஸ்க்கு விட்டுக்கொடுப்பது என்ற கேள்வியை எழுப்பி, ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சி தலைவர் என்று அவரது தரப்பு தெரிவித்தது.

ஓபிஎஸ் தென்மண்டலங்களில் ஒன்றுமே சாதிக்கவில்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்ததையும், அதிக செலவு தாங்கள் தான் செய்ததாகவும் கூறிய ஈபிஎஸ், அதனால் தனக்கு தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்று கூறினார்.

அதற்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ், வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுதான், தென்மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஈபிஎஸ்-ன் தவறான அரசியல் முடிவுகள் தான் தோல்விக்கு காரணம். அதுமட்டுமல்லாது, செலவு செய்த பணம் ஒன்றும் உங்கள் பணம் இல்லையே.. கட்சி பணம் தானே என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

எனவே மீண்டும் திங்கட்கிழமை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!