திமுக பொருளாளர் யார்..? தென்மாவட்டங்களில் மு.க.அழகிரி இடத்தை நிரப்ப ஸ்டாலின் போட்ட திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 12:50 PM IST
Highlights

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பொருளாளர் பதவி போட்டியில் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுகவின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவையடுத்து கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பொருளாளராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள திமுக அரசியல் வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளைப் பெற்றுவருகிறது. பிரஷாந்த் கிஷோரின் வழிகாட்டுதலின்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாகை சூட தென் மாவட்டங்களில் கட்சியின் பிடியை வலுப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியுடன் இருக்கிறாராம். இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பொருளாளர் பதவி போட்டியில் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ.பெரியசாமி தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். மு.க.அழகிரிக்கு நிகராக தென் மாவட்டங்களில் வாய்ஸ் கொண்டவர் ஐ.பெரியசாமியே, அதனால் அவருக்குத்தான் பொருளாளர் பதவி என கூறப்படுகிறது. இப்போதைக்கு, துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி, ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவி என்றே மேலிடம் தீர்மானித்திருப்பதாக அறிவாலய வட்டாரம் கூறுகின்றது.

1977-ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது, கருணாநிதி தனது சகா க.அன்பழகனை பொதுச் செயலாளராக ஆக்கினார். அன்று தொடங்கி மார்ச் 6 வரை அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்துவந்தார். தற்போது, அவரின் மறைவை அடுத்து ஸ்டாலின் தன் கூடவே வழிகாட்டியாக இருக்கும் துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளார்.  அடுத்து தன் பார்வையைத் திருப்பி ஐ.பெரியசாமியை பொருளாளர் ஆக்கி தென் மாவட்டத்தை வலுப்படுத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. 

click me!