அதிமுகவில் எதிர்க்கட்சித் துணை தலைவர், கொறடா பதவி யாருக்கு..? ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Jun 10, 2021, 9:50 PM IST
Highlights

அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகிய பொறுப்புகளுக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக பிரதான எதிர்க்கட்சியானது. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட உரசலைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தப் பதவிகளை  நிரப்புவதற்காக ஜூன் 14 அன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு பதவிகளையும் பிடிக்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதான எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துணைத் தலைவராக ஓ.பன்னீசெல்வம் நியமிக்கப்படுவார் என்றே அதிமுகவில் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், எதிர்கட்சி துணை தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்று ஓபிஎஸ் தெரிவித்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மட்டும் போதும் என்றும் அவர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அந்தப் பதவியை ஏற்காத நிலையில், வேறு யாருக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம் என்று பேச்சுகளும் அதிமுகவில் எழுந்துள்ளன.
துணைத் தலைவர் பதவிக்கு வைத்தியலிங்கம் அல்லது நத்தம் விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவைக்குள் கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க பதவி கொறடா பதவி கே.பி.முனுசாமி அல்லது கே.பி. அன்பழகன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமூக ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளை வழங்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!