ஒன்றிய அரசா, மத்திய அரசா என பெயர் சூட்டும் காலமா இது..? ஸ்டாலின் அரசுக்கு எதிராக ஆர்.பி.உதயகுமார் ரகிட ரகிட..!

By Asianet Tamil  |  First Published Jun 10, 2021, 9:02 PM IST

மக்கள் தடுப்பூசிக்கு அலைந்து வரும் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என பெயர் சூட்டு விழாவில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 


மதுரை திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மதுரையில் நேற்று மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாகவும் மக்கள் அளித்துவரும் பங்களிப்பு காரணமாகவும் தொற்று குறைந்து வருகிறது. என்றாலும்கூட இறப்பின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கும் கருப்பு பூஞ்சை மருந்துக்கும் தட்டுப்பாடு என பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மக்கள் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுகிற வழியும் தடுப்பூசி பெறுவதிலும் மக்களின் நலனை முன்னிறுத்திதான் அரசின் அணுகுமுறை அமைய வேண்டும். இந்த நேரத்தில் அரசின் அணுகுமுறை மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தடுப்பூசிக்கு அலைந்து வரும் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என பெயர் சூட்டு விழாவில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.
இது மத்திய அரசுக்கு பெயர் சூட்டும் நேரம் அல்ல. மக்களின் உயிர் பிரச்னையில் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மத்திய அரசு 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்கிறபோது, இங்கு தேர்வை நடத்துவோம் என்ற ரீதியில் ஊகத்தை ஏற்படுத்திவிட்டு பின்பு ரத்து செய்கிறார்கள். 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவோம் என்று கூறி பின்பு ரத்து செய்கிறார்கள். உலகளாவிய தடுப்பூசி டெண்டர் கோரப்பட்ட செய்தி  மக்களுடைய பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், அரசு எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமானது.


அரசு எடுக்கிற நடவடிக்கை எல்லாம் மக்களின் நலனை முன்னிறுத்திதான் நடைபெற வேண்டும். தவிர வெற்று விளம்பரத்தில் எதுவும் அமையக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் மாறிமாறி வெளிவருகின்றன அறிவிப்புகள். கடந்த 32 நாட்களில் மட்டும் எத்தனை அறிவிப்புகள் என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். உயிர் பலியைத் தவிர்த்து மத்திய அரசிடம் தடுப்பூசியை பெறுவதில் வெற்றி பெற வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லியோ குறை சொல்லியோ பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது.” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Latest Videos

click me!