ஒரே ஆட்டோவில் அமைச்சர்கள், எம்.பி. செல்வதா..? நடவடிக்கை எடுங்கள்.. பாஜக தலைவர் எல்.முருகன் கோபம்..!

By Asianet TamilFirst Published Jun 10, 2021, 9:25 PM IST
Highlights

ஊரடங்கு விதிகளை மீறி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
 

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோர், குறுகலான பாதையில் செல்ல முடியாமல் தவித்ததால், ஆட்டோவில் பயணம் செய்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த எல்.முருகன், “ஊரடங்கு விதிமுறை நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கையில் ஒரே ஆட்டோவில் அமைச்சர்கள் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் மூவராக பயணம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று எல். முருகன் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “ நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்களை அரசு குழப்பக் கூடாது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் இருப்பதை வைத்து மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். அதிமுக- பா.ஜ.க ஆகியவை கூட்டணி கட்சிகள். கூட்டணிக்குள் மாறுபட்டு கருத்துகள் இயல்பு. ஆனால், கூட்டணி தொடர்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். தடுப்பூசி மையம் செங்கல்பட்டு, குன்னூர் பகுதியில் இருப்பது கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன் அளிக்குமா என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் தடுப்பூசி மீதான பயத்தையே காங்கிரஸ் கட்சிதான் ஏற்படுத்தியது. இன்று தடுப்பூசி தொடர்பாக விமர்சனத்தை சிதம்பரம் வைப்பது ஏற்க கூடியது அல்ல. தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு உற்பத்தி செய்து வருகிறது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
 

click me!