தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் யார்..? குமரிக்காரர்கள் மல்லுக்கட்டு.. கூடிகூடி கலையும் கதர்ச்சட்டைகள்..!

By Asianet TamilFirst Published May 18, 2021, 9:33 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பதில் இன்னும் முடிவை அறிவிக்க முடியாமல் இழுபறி நீடிக்கிறது.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 18 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளில் எல்லாம் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், 18 பேர் கொண்ட காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் யார் என்பது அக்கட்சி சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்நிலையில் அதை காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய மே 7 அன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், தலைவர் பதவிக்குப் பலரும் போட்டியிட்டதால், கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. 18 பேர் கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தலைவரைத்தேர்வு செய்ய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக வேறு நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மா நில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்றனர். அதையும் தாண்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி.க்கள் என காங்கிரஸ் தலைவர்கள் டஜன் கணக்கில் பங்கேற்றனர்.


இவ்வளவு பேர் கூடியும் கட்சித் தலைவரைத் தேர்வு செய்ய முடியவில்லை. மொத்தமுள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 11 பேர் புதியவர்கள் என்பதால், அவர்கள் போட்டியிலேயே இல்லை. ஆனால், ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்த  கு.செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ்.விஜயதரணி (விளவங்கோடு), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகியோர் இடையே தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது.
இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக நிறைய வாக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் தங்களுக்குதான் தலைவர் பதவியைத் தர வேண்டும் என்று வலியுறுத்தியதால், ஒருமித்த முடிவு எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துவிட்டதாகவும் தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

click me!