நீட்டுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருவார்.. இப்போதே அறிவித்த அன்பில் மகேஷ்..!

By Asianet TamilFirst Published May 17, 2021, 9:03 PM IST
Highlights

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை திமுக இளைஞரணித் தலைவரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கொண்டு வருவார் என்று  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா காலத்தில் இணைய வழிக் கல்வி உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை என மின்னஞ்சல் அனுப்பட்டது. ஆனால், இக்கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பது என்பது கூட்டாட்சிக்கு எதிரானது.  மாநில கல்வி அமைச்சர்களும்  பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால், அதற்கு பதில் வரவில்லை. பதில்  வராத சூழலில் டெல்லிக்கு சென்றோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தமிழ்நாட்டின்  கருத்தை முன் வைப்போம்.
கடந்த 2019-ஆம் ஆண்டே புதிய கல்வி வரைவு தொடர்பாக, தற்போதைய முதல்வர்,  எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே, கல்விக் கொள்கையின்  பாதங்களை ஆராய்ந்து அறிக்கை தயாரித்து   கொடுத்தோம். எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. கல்வியைத் தனியார் மையமாக்குதல், குலக்கல்வி போன்றவைதான் புதிய கல்விக் கொள்கையில் தெரிகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் கருத்துகளை தெரிவிக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடப்பது உறுதி. அது எப்போது  நடத்தப்படும் என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். எனவே மாணவர்கள் தயாராக இருக்கும்படி வேண்டுகிறேன். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ரத்து செய்வது எங்களுக்கு முதன்மையானது. எனவே சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே முதல் கேள்வியாக இதை எழுப்பி  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை திமுக இளைஞரணித் தலைவரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கொண்டு வருவார். ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுப்போம்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

click me!