நிரந்தர ஆளுநர் நியமனத்தின் பின்னணியில் யார் தெரியுமா...?

 
Published : Sep 30, 2017, 09:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
நிரந்தர ஆளுநர் நியமனத்தின் பின்னணியில் யார் தெரியுமா...?

சுருக்கம்

who is back end of tamilnadu permanent governor

தமிழகத்துக்கு ஒரு வழியாக நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதும், சட்டம் படித்த முந்தைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்,  தமிழகத்தை உலுக்கிய பல திருப்பங்களுக்கு கடந்த ஓர் ஆண்டின் சாட்சியாகவே இருந்துவிட்டார். 

எத்தனை எத்தனை கோரிக்கைகள்! ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே பிரச்னைகள் தலை தூக்கும் போதெல்லாம், ஆளுநரைப் பார்க்க ஓடுவதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால், அதற்காக எப்போது ஆளுநர் சென்னை வருவாரோ என்று ஏக்கத்தில் காத்திருந்த நிலையும் இங்கே இருந்தது. 

மகாராஷ்டிர மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், எப்போது தமிழகத்துக்கு வருவதாக இருந்தாலும், அது பிரேக்கிங் நியுஸாகவும், தலைப்புச் செய்தியாகவும் மாறிப்போன நிலையில், இப்போது ஓர் ஆளுநர் சென்னைக்கு நியமிக்கப்பட்டிருப்பதே ஒரு பிரேக்கிங் மற்றும் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. அந்த அளவுக்கு, அரசியல் நெருக்கடிகள் தமிழகத்தில் சுற்றிச் சுற்றிச் சுழன்றடித்த போதும், மத்திய அரசுக்கு ஒவ்வொரு முறையும் நிரந்தர ஆளுநரை நியமியுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தபோதும் அசராத மத்திய அரசு, இப்போது மட்டும் திடீரென ஏன் ஒரு முழு நேர ஆளுநரை நியமிக்க முடிவு செய்தது? 

கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இதற்கான பதில் தெரிந்தவர்கள் ஓரிருவர்! அவர்கள்தான் இத்தகைய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்திவிட்டார்கள் என்று சொல்லலாம்! அவர்கள் - திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அவரின் அமைச்சரவை சகாக்கள்! 

ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை!  

கடந்த வருடம் ஆக.,30 ஆம் தேதி, ஆளுநராக இருந்த ரோசய்யா பதவி நிறைவு பெற்றதை அடுத்து, மறு நாளே தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவை நியமித்தார் குடியரசுத் தலைவர். அவர் பொறுப்பு ஆளுநராக வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அன்றில் இருந்து தொடங்கின பிரச்னைகள் பல. 

அந்தக் காலகட்டத்தில்தான், ஒரு மாநில முதல்வர் படுத்த படுக்கையாக சுயநினைவற்ற நிலையில் கிடக்க,  மாநில ஆட்சி நிர்வாகமும்  அப்படியே படுத்த படுக்கையாகிவிட்டது. ஜெயலலிதா என்ற ஒற்றை மனிதரை மட்டும் சிலர் கடத்திச் சென்றுவிடவில்லை, தமிழக ஆட்சி நிர்வாகத்தையே கடத்திச் சென்று தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சட்ட ரீதியாக ஆளுநரால் பதவிப் பிரமாணம் எடுக்காமல், ரகசியக் காப்புப் பிரமாணம் எடுக்காமல், வெளியில் இருந்து சிலர் ஆட்சியை நடத்திச் செல்கின்ற துர்பாக்கியம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது உண்டு. 

இந்த நிலையில், நிர்வாகம் முடங்கிப் போய், ஒரு பாலம் திறக்கக் கூட முதல்வர் கை அசைவை எதிர்பார்த்துக் கிடக்க, பல திட்டங்கள் முடிக்கப்பட்டும் கோமா நிலையில் கேட்பாரற்றுக் கிடந்தன. 

அந்த நிலையில் தான் மத்திய அரசு கொடுத்த நெருக்குதலில், ஆளுநர் மருத்துவமனையில் கால் வைத்தார். அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த மருத்துவ அறிக்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், நேரடியாகக் களம் புகுந்த ஆளுநர், தன் பங்குக்கு முதல்வரைப் பார்த்தேன், அவர் என்னைப் பார்த்து கையசைத்தார் என்று, எல்லோரும் அளித்த வழக்கமான பேட்டியை தன் பங்குக்கும் சேர்த்து, ஊடகங்களுக்கு அளித்துவிட்டுச் சென்றார். ஆனால், அதுதான் அவரைப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டி விட்டிருக்கிறது என்பதை இப்போது உணர்ந்து வெட்கப் பட்டிருக்கிறார்!

தலைப்புச் செய்தியாக இந்த கையசைத்தார் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்றுவிட, ஜெயலலிதா படுக்கையில் கிடந்தாலும் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கையை அப்போது பொது மக்களிடம் ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து, அவர்களும் தங்கள் பங்குக்கு அப்பல்லோ கொடுத்த அறிக்கையின் சாயலை மக்களிடம் விதைத்துவிட்டுச் சென்றார்கள்.

ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.  அன்று இரவே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்.  அதன் பிறகு ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலகிய போதும், அவரை சிறிது நாட்கள் தொடர விட்டதும், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமிக்கச் சொன்ன போதும் ஆளுநரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இருப்பினும் அப்போதும் அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டே இருந்தது. அந்த விமர்சனங்களைப் பற்றி அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. 

பின்னர், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி, அதிமுக அம்மா அணி இரண்டும் இணைந்த போது, துணை முதல்வராக ஓபிஎஸுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஒரு சர்ச்சையை சந்தித்தார் ஆளுநர். துணை முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. ஆனால் அது அமைச்சரவைக்கு என்று பின்னர் சமாளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இருவரையும் கை சேர்த்து, ஏதோ சண்டை போட்டுக்  கொண்ட வகுப்பு மாணவர்களை வாத்தியார் சேர்த்து வைப்பது போல் அந்தக் காட்சி  என்றும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆளுநர் செய்யும் வேலையா இது என்று கேட்டவர்களும் இருந்தார்கள். 

தமிழகத்தில் இக்கட்டான பிரச்னைகள் பல நடக்கும் போது மும்பையில் இருந்தார் என்பதால், அவரால் தமிழக பிரச்னைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என எதிர்க்கட்சிகள்  குற்றம்சாட்டின.  நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற விவகாரத்தை முன்வைத்து ஆளுநரை சந்திக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், இதுவே நான் இது விஷயமாக ஆளுநரை சந்திப்பது கடைசி என்று கூறிவிட்டு வெளியில் வந்தார். 

சட்டம் படித்தவர், அனுபவமும் நுணுக்கமான அறிவும் பெற்றவர் என்று பெயரெடுத்த வித்யாசாகர் ராவே, பல சந்தர்ப்பங்களில் தமிழக அரசியல் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகித்தான் போனார். அப்போதெல்லாம் அசராதவர், திடீரென ஏன் ஆட்டம் கண்டார்..?

எல்லாம் திண்டுக்கல் சீனிவாசன் கிளப்பிய புயல்தான் என்கிறார்கள்! அப்பல்லோவில் அம்மா இட்லி சாப்பிட்டார்கள், எங்களைப் பார்த்தார்கள் என்று சொன்னதெல்லாம் பொய்... அய்யா.. எங்களை மன்னிச்சிடுங்க என்று கை தூக்கி கும்பிட்டு, அன்று போட்ட ஒரு வெடிகுண்டு, இன்று ஆளுநர் நியமனத்தின் வந்து முடிந்திருக்கிறது. ஜெயலலிதா 75 நாட்களில் 3 நாட்களே சுய நினைவோடு இருந்தார் என்று ஒரு தகவலை உடனிருந்த தீபக் சொல்ல, அப்படியானால், அந்த தினத்தில்தான் ஒரு வேளை ஆளுநர் போய்ப் பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரோ என்று கேலியாகப் பலர் பேச, இது ஆளுநரையும் சேர்த்தே அவமானப் படுத்தியிருக்கிறது. 

சென்ற வாரம் மும்பைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தமிழக அரசியல் குறித்தும், தன் நெஞ்சில் நீங்காத  நெருஞ்சி முள்ளாய்க் குத்திய விவகாரங்கள் குறித்தும் விவாதித்திருக்கிறார். அந்த பாதிப்புதான், மீண்டும் தமிழகம் வருவதற்கு அவருக்கு வெட்ககரமான விஷயமாக இப்போது மாற்றியிருக்கிறது. தொடர்ந்து தில்லியிலும் சென்று குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என ஒரு வட்டம் அடித்து, ஒருவழியாக இப்போது தான் தமிழகத்துக்கு வருவதன் தலைவலியில் இருந்து விடுபட்டிருக்கிறார்...! 

ஒரு மாநிலத்துக்கு ஒரு ஆளுநர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும், தமிழக அரசியல் சூழல் அந்த ஒற்றை ஆளுநரை அவசியமாக்கி விட்டது! தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 13 மாதங்கள் என நீண்ட காலம் ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது இதுவே முதல் முறை. அந்த முதல் முறை சரித்திரத்தையும் மேலும் நீட்டித்து சாதனை படைக்காமல், தமிழக அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தகர்த்துக் காட்டியிருக்கிறார்கள்! 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..