தேமுதிகவில் அமளிதுமளி... மகனுடன் மல்லுக்கட்டும் விஜயகாந்த் மனைவி... பரபர பின்னணி!

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 3:56 PM IST
Highlights

கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும், மகன் விஜய பிரபாகரனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவதால் ஆண்டாள் அழகர் இல்லம் அமளிதுமளியாகிக் கிடக்கிறது.

கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும், மகன் விஜய பிரபாகரனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவதால் ஆண்டாள் அழகர் இல்லம் அமளிதுமளியாகிக் கிடக்கிறது.

சிங்கமாக கர்ஜித்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் நலிவடைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சியும் பின்னடவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தேமுதிகவை அடுத்து தலைமையேற்று நடத்தப்போவது யார்? என்கிற போட்டி பிரேமலாதாவிற்கும் அவரது மகன் விஜய பிரபாகரனுக்கும் இடையே மூண்டு தொண்டர்களை திணறடித்து வருகிறது. 

விஜயகாந்த்திற்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் தேமுதிகவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, விஜயகாந்த் தனது மகன் விஜய பிரபாகரன் கட்சியை வழிநடத்தும்படி கேட்டுக் கொண்டார். இளைஞரணி துணைப்பொதுச்செயலாளராக இருந்த பிரேமலதாவின் சகோதரர் கடந்த ஆண்டு இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். இந்த இரு பதவிகளையும் அவரே நிர்வகித்து வந்தார். 

இந்த நிலையில், அவரிடம் இருந்த இளைஞரணி செயலாளர் பொறுப்பை பறித்து விஜய பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.  விஜயபிரபாகரன் விரைவில் அந்தப்பொறுப்பை ஏற்பார் என கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், கட்சியில் எந்தப்பதவியிலும் இல்லாத பிரேமலதா தேமுதிக பொறுப்பாளராக பதவியேற்றார். ஆனால், அவருக்கு முன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட விஜயபிரபாகரனுக்கு இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை. பிரேமலதா முட்டுக்கட்டை போடுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் தே.மு.தி.கவினர்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், ‘’கேப்டன் ஆரோக்கியமாக இருந்தபோதே அவரை வழிநடத்துவது பிரேமலதாதான் என மாற்றுக்கட்சியினரே குற்றம்சாட்டி வந்தனர். அது தேமுதிக மேடைகளிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகத்திலும் பிரேமலதாவின் கையே ஓங்கி இருந்தது. தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக இருந்த அவரது தம்பி எல்.கே.சுதீஷும் அக்காவுக்கு பக்கபலமாக இருந்து வந்தார். இதனால், கேப்டனையும் மீறி அவர்கள் இருவரும் எடுப்பதே கட்சியில் முடிவாக இருந்தது. 

விஜயகாந்த் உடல் நலம் குன்றிய பிறகு கட்சியில் சுணக்கம் ஏற்பட்டது. அடுத்து என்னவாகுமோ எனத் திணறியபோது கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சியை நிர்வகிப்பார் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு பிரேமலதா ஒப்புக்கொள்ள மறுத்து வந்தார். தானே கட்சி நிர்வாகத்தை ஏற்பதாக கூறினார். ஆனால், விஜயகாந்திற்கு விருப்பம் இல்லை. தனது மூத்த மகன் அதைக் கவனித்துக் கொள்ளட்டும். நேரடி வாரிசு என்பதால் எந்த சிக்கலும் வராது என உறுதியாகக் கூறினார். அதையும் மீறி தேமுதிகவின் பொருளாளராக தன்னை நியமிக்கும்படி பிரேமலதா வலியுறுத்தியதால் அரை மனதாக விஜயகாந்த் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு போராட்டங்கள், கட்சி விழாக்கள், கூட்டங்கள் என பரபரப்பானார் பிரேமலதா. 

காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தனது அரசியல் பயணத்தை விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் துவங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேடையில் விஜயபிரபாகரன் பேசிய பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. பல தரப்பாலும் அவரது பேச்சு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என பரபரப்பார் என கட்சியினர் உற்சாகமானோம். ஆனால், அதன் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியிலும் விஜயபிரபாகரன் பங்கேற்கவில்லை. இதற்குக் கட்சியில் பிரேமலதாவின் தலையீடுதான் காரணம். பிரேமலதா பரபரப்பாக கட்சியில் இயங்கி வந்தாலும், தேமுதிக விவராகரங்கள் அனைத்தையும் விஜயபிரபாகரன் கவனித்துக் கொள்வார் என விஜயகாந்த் உறுதியாக கூறியிருந்தார்.

ஆனால், இதனை பிரேமலதா விரும்பவில்லை. அனைத்தும் தனது முடிவுப்படிதான் நடக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். மகனாக இருந்தாலும் தனக்கும், தனது தம்பிக்கும் அடுத்துதான் மற்றவர்கள் எல்லாம் என்கிற மனநிலையில் அவர் இருக்கிறார். அதனால்தான் இன்னும் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி அளிக்காகமல் தாமதப்படுத்தி வருகிறார். இது, தாய் மகனுக்கிடையே பெரிய விவகாரம் வலுத்து வருகிறது. இதனால், கேப்டன் கடும் அதிர்ர்சியில் இருக்கிறார். 

கடைசியாக மணப்பாறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கலந்துக்கொண்டார். ஆனால் அதற்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு கட்சியினர் பங்கேற்கவில்லையாம். இதற்கு, இந்த நிகழ்ச்சி யாரும் பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம் என பிரேமலதா இட்ட கட்டளையே காரணம். மணப்பாறையில் பேசிய விஜய பிரபாகரன், ’நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.

என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன். எனது தந்தை சென்ற வழியில்தான் நானும் செல்வேன். இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்’ என வார்த்தைக்கு வார்த்தை தந்தை விஜயகாந்த்தை பற்றி மட்டுமே கூறினாரே தவிர, கட்சியில் பொருளாளராக இருக்கும் தனது தாய் பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. 

அதேபோல் சமீபத்தில் நடந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழாவின்போது விஜய பிரபாகரன் மட்டுமே மீடியாக்களிடம் பேசினார். மைக் கிடைத்தால் மணிக்கணக்கில் பேசும் பிரேமலதா அப்போது பேசவில்லை. மகனுக்கும் மனைவிக்குமான இந்த விவகாரத்தில் விஜயகாந்த் உறுதியான முடிவெடுத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். ஆனால், விஜயகாந்தையும் மீறி கட்டுப்பாடுகள் பிரேமலதாவின் கைக்கு போய்விட்டது’’ என்கிறார் அந்த நிர்வாகி. கருணாநிதி- ஜெயலலிதா காலத்திலேயே கஜா புயலாய் சுழன்றடித்த விஜயகாந்தின் வீட்டிற்குள்ளேயே அதிகாரப்புயல் சூழ்ந்து இருப்பது தேமுதிகவினரை கலங்கடித்து வருகிறது.

click me!