கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்..? உடைந்து கதறும் ஓபிஎஸ்-இபிஎஸ் .

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 5:02 PM IST
Highlights

கழகத்தின் சோதனையான காலகட்டங்களில் கழகத்தை கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய கழகத்தின் தூண் சரிந்தது. இன்று கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரது இழப்பு கழகத்திற்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடி' முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு.மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தோம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் விசுவாசமிக்க தொண்டர், புரட்சித்தலைவருக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த ரசிகர், புரட்சித்தலைவர் கண்ட பேரியக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தம் விழிகளை இமைகள் மூடும் வரை, ஓயாது உழைத்த கழக உடன்பிறப்பு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதி. கழகத் தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்து கொண்டாடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களில் ஒன்று என பலவாறாகவும் அண்ணன் திரு.மதுசூதனன் அவர்களைப் பற்றி வரலாறு சொல்லும்.

கழகத்தின் சோதனையான காலகட்டங்களில் கழகத்தை கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய கழகத்தின் தூண் சரிந்தது, இன்று கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும், உண்மையிலேயே அவரது இழப்பு கழகத்திற்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அண்ணன் திரு. மதுசூதனன் அவர்கள் 1953 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கி, அதனை தொடர்ந்து வட சென்னை பகுதியில் எம்ஜிஆர் பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்ஜிஆர் பெயரில் இரவு பாடசாலைகளை தொடங்கியவர். 

சென்னை மாவட்டத்தை சேர்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவராலும் அஞ்சாநெஞ்சன் என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட அண்ணன் மதுசூதனன் அவர்கள் புரட்சித்தலைவர் இயக்கம் தொடங்கியபோது, புரட்சித்தலைவர் நீக்கப்பட்டதை கண்டித்து சிறையில் இருந்துள்ளார். கழகத்திற்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்.வடசென்னை மாவட்டத்தில் பகுதி கழக செயலாளராக, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக, மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி அண்ணன் மதுசூதனன் அவர்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991 இல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது சட்டமன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பதவி வழங்கி, அழகு பார்த்தார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களால், கழக கொள்கை பரப்புச் செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர். பின்னர் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் 5-2-2007 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அண்ணன் திரு.மதுசூதனன் அவர்கள் கழக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை சீரிய முறையில் கழகப் பணிகளை ஆற்றி வந்தவர். 

ஏறத்தாழ 70 ஆண்டுகள் புரட்சித்தலைவரின் புகழ் பாடி, கழக வளர்ச்சிக்காக பாடுபட்டு வாழ்நாளெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் விசுவாச தொண்டராக வாழ்ந்து, மறைந்த அண்ணன் மதுசூதனன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரை கோடி கழகத்தின்ரின் சார்பிலும், எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். 

கழக அவைத் தலைவர் அண்ணன் திரு மதுசூதனன் அவர்களின் மறைவையொட்டி 5-8-2021 முதல் 7-8-2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும், அதேபோல தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்து கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!