8 மணிக்கு வாக்குஎண்ணிக்கை.. தமிழகத்தை ஆளப்போகும் கட்சி எது..? திமுகவா, அதிமுகவா...? பரபரப்பில் இரு கூட்டணிகள்!

By Asianet TamilFirst Published May 2, 2021, 6:51 AM IST
Highlights

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகும் கட்சி எது என்பது இன்று தெரியும்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி, நாம்  தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. என்றாலும் திமுக - அதிமுக கூட்டணி இடையேதான் பிரதானப் போட்டி நிலவியது. மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற தேர்தலில் 72.70 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும். இதற்காக அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட உள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.  பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. காலை 8.30 மணி முதல் முன்னணி நிலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும். இந்த முறை தேர்தல் முடிவுகள் தெரிய காலதாமதாம் ஆகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிறிய தொகுதிகள் என்றால் பிற்பகல் 3 மணியளவில் முடிவு தெரிய வாய்ப்புள்ளது. இந்த முறை முழு முடிவுகளும் தெரிய நள்ளிரவு ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் துணை ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில் கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தது. அக்கட்சி வெற்றி பெறுவோம் என்ற முனைப்பில் உள்ளது. இதேபோல கருத்துகணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது பிற்பகலுக்குப் பிறகு உறுதியாகத் தெரிந்துவிடும். இதனால், திமுக- அதிமுக என இரு கட்சியினரும் பரபரப்பில் உள்ளனர்.
 

click me!