“மசூதிகளில் ஸ்பீக்கர் வைக்க அனுமதிக்கும் சட்டம் எது?” உயர்நீதிமன்றம் கேள்வி...

By Ganesh RamachandranFirst Published Nov 17, 2021, 1:38 PM IST
Highlights

ஒலி மாசு ஏற்படுத்துவது பற்றிய வழக்கில் கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், எந்த சட்டத்தின் அடிப்படையில் மசூதிகளில் ஒலி பெருக்கிகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ராகேஷ் என்பவர் ஒலி மாசு குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், 16 மசூதிகளை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீதர் பிரபு, மத ரீதியில் வருடம் முழுவதும் ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார். மேலும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த இரண்டாயிரமாவது ஆண்டின் விதிகளின் Rule 5(3) படி, கலாசார, மத ரீதியிலும் திருவிழா காலங்களிலும் மட்டும் விதிகளை மீறி அனைத்து நேரங்களிலும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த மாநில அரசு அனுமதிக்கலாம் என்றும், ஆனால் வருடத்தில் 15 நாட்களுக்கு மட்டுமே அப்படி அனுமதிக்க முடியும் என்றும் வாதிட்டார்.

மேலும், கர்நாடக வக்பு வாரியத்தின் அறிவுறுத்தலின் படியே இந்த 16 மசூதிகளிலும் ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அனுமதியை அளிக்க வக்பு வாரியம் யார் என்றும் கேள்வி எழுப்பினார். இதனை எதிர்த்து வாதிட்ட மசூதிகள் தரப்பு வழக்கறிஞர், காவல்துறை அனுமதியுடனே ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிவிடாமலிருக்க சிறப்பு கண்காணிப்பு கருவிகள் அவற்றில் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ரிதுராஜ் அவஸ்தி மற்றும் சச்சின் ஷங்கர் ஆகியோர், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு மீறப்படுகிறதா என்பதை அராய உத்தரவிட்ட நீதிபதி, எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள ஒலி மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி விளக்கவும், எந்த சட்டத்தின் அடிப்படையில் மசூதிகளில் ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஒலி மாசுபாடு காரணமாக முக்கிய சாலைகளின் அருகே வசிப்பது இப்போதெல்லாம் சிரமமாக உள்ளது என்று கருத்து கூறிய நீதிபதிகள், வாகனங்களின் சைலன்சர்கள், ஹாரன்கள் ஆகியவை மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அளவை மீறாமல் இருக்க கடுமையாக சோதனையிடவும், சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

click me!