
எங்கள் தரப்பில் சமர்பித்த வீடியோவை விசாரணை ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தினாலே மக்களுக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும் ஆனால் ஆணையம் அதை செய்யவில்லை எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது.
இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.
அதன்படி ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகிறது விசாரணை ஆணையம்.
அந்த வகையில் இன்று 2 வது முறையாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலாவையும் ஆஜராக விசாரணை ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் அவர் சிறையில் மவுன விரதம் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது வக்கீல் செந்தூர் பாண்டியன் ஆஜராகி எழுத்துபூர்வ அறிக்கையை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், எங்கள் தரப்பில் சமர்பித்த வீடியோவை விசாரணை ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தினாலே மக்களுக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும் ஆனால் ஆணையம் அதை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் நாங்கள் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.