உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு திடீர் மரணம் !

First Published Jan 25, 2018, 12:23 PM IST
Highlights
Udumalai Sankar murder case judge Alamelu expired


உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில், அவரது மனைவி கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டணை விதித்த திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இன்று திடீரென மரணமடைந்தார்.

உடுமலைப்பேட்டை அருகே குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வந்தனர்

இந்த நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை ரௌடி கும்பல் ஒன்று உடுமலை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் வெட்டியது.  இந்த சம்பவத்தில் சங்கர் உயிரிழந்து விட்டார். 

இதனை தொடர்ந்து நடந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இதனை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த டிசம்பர் 12ந்தேதி இறுதி தீர்ப்பு வழங்கினார்.  அதில், முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 9ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அலமேலு ஆணையிட்டார்.

இதனிடையே  கோவையில்  வசித்து வந்த நீதிபதி  அலமேலுவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து கோவையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ருந்தார்ப. ஆனால் சிகிச்சை பலனின்றி  நீதிபதி அலமேலு இன்று மரணமடைந்தார்.

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் அலமேலு நடராஜன்.இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

click me!