காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முட்டி மோதும் தலைகள்...திணறும் காங்கிரஸ் கட்சி..!

By Asianet TamilFirst Published Mar 22, 2019, 8:17 AM IST
Highlights

வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இழுத்தடித்துவருகிறது. தொகுதிகளை ஒதுக்குவதில் போட்டாபோட்டி நிலவுவதால் காங்கிரஸ் கட்சி திணறிவருவதாக தகவல்கள் வெளியகி உள்ளன.
 

திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது இந்தத் தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் காங்கிரஸில் குழப்பம் நீடித்துவருகிறது. புதுச்சேரியில் வைத்தியலிங்கம் நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறிவருகிறது.
அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க கட்சிக்கு நெருக்கடி கொடுத்துவருவதே இதற்குக் காரணம். அகில இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் குடும்பத்துக்குப் போட்டியாக சுதர்சன நாச்சியப்பனும் களமிறங்கியிருப்பதால், அத்தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சி திணறிவருகிறது. ப. சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட்டு ஒதுக்க அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். இருவரையும் சமாளிக்கும் வகையில் மாணிக் தாகூரை சிவகங்கையில் களமிறக்கவும் காங்கிரஸ் கட்சி பரிசீலித்துவருகிறது. இதனால், இந்தத் தொகுதியில் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடித்துவருகிறது.
திமுக பலமாக இருக்கும் கரூர், கிருஷ்ணகிரி தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்டு வாங்கியது. கரூர் தொகுதி ஜோதி மணிக்காகவும், கிருஷ்ணகிரி டாக்டர் செல்லக்குமாருக்காகவும் என காங்கிரஸில் காரணம் கூறப்பட்டது. தற்போது இந்த இரு தொகுதிகளிலும் இவர்களை வேட்பாளர்களாக களமிறக்க கட்சிக்குள் எதிர்ப்பு நிலவிவருகிறது.
அதிமுக சார்பில் கரூரில் தம்பிதுரையும் கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமியும் போட்டியிடுகிறார்கள். இருவரும் பலமான வேட்பாளர்கள் என்பதால், அவர்களை எதிர்கொள்ளும் வகையில் பலமிக்க வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் சிலர் மேலிடத்துக்கு கோரிக்கை விடுதுள்ளனர். 
கரூரில் தம்பிதுரையை எதிர்த்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் யோசித்துவருகிறது. இளங்கோவன் விரும்பி கேட்ட ஈரோடு தொகுதிக்கு அருகே கரூர் தொகுதி உள்ளதால், அவருக்கு அத்தொகுதியைக் கொடுக்க கட்சி மேலிடம் விரும்பியது. ஆனால், கரூரில் போட்டியிட இளங்கோவன் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவன் மறுத்துவிட்ட நிலையில், கரூரில் குஷ்புவை களமிறக்க கட்சி தலைமை யோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், குஷ்பு திருச்சி தொகுதியைக் கேட்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல தேனியில் ஜே.எம். ஆருணை நிறுத்துவதா அல்லது வேறு யாரையாவது நிறுத்துவதா என்பதிலும் காங்கிரஸில் குழப்பம் நீடித்துவருகிறது. தேனி தொகுதியை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷாவும் கேட்டுவருவதே இதற்குக் காரணம். தேனியில் யாரை நிறுத்துவது என்பதில் இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள கன்னியாகுமரியில் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் அக்கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 
ஒட்டுமொத்தமாக வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸில் உள்ள எல்லா கோஷ்டிகளையும் தலைவர்களையும் சமாளித்து வேட்பாளர்களை அறிவிப்பதற்குள் வேட்புமனு தாக்கலே முடிந்துவிடும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் அங்கலாய்க்கிறார்கள். மற்ற கட்சிகளில் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்து, அறிமுகம் கூட்டம் நடத்தி, பிரசாரத்துக்கே கிளம்விட்ட நிலையில், வேட்பாளர்கள் யார் என்பது தெரியாததால், காங்கிரஸ் கேட்டு வாங்கிய 10 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்படவே இல்லை. இதனால், திமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!