நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில்! நெக்ஸ்ட் என்ற அடுத்த ஆபத்து.. வீறுகொண்டு எதிர்ப்போம்! முதல்வர் ஸ்டாலின்!

By vinoth kumar  |  First Published Nov 26, 2023, 2:52 PM IST

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 


நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும் என  முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு, 20-ஆம் ஆண்டு தொடக்க விழா, மற்றும் TNMSA - TNDSA கருத்தரங்கில் காணொலி வாயிலாக ஆற்றிய வாழ்த்துரையில்;- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. நோயால் உடலும் உள்ளமும் துவண்டு போகும் ஏழைகளுக்கு உரிய சிகிச்சை கொடுத்து, அவர்களைக் குணப்படுத்தி, அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைப்பவர்கள் – மருத்துவர்கள். மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியைத்தான், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்ட அனைத்து டாக்டர்களும் மேற்கொண்டிருக்கிறீர்கள். 20 ஆண்டுகாலமாக இந்தச் சங்கத்தை சிறப்பாக நடத்தி, அதன் 4-ஆவது மாநாட்டை எழுச்சியோடும் இலக்கோடும் நடத்தி வருவதை பாராட்டுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்.

Tap to resize

Latest Videos

உயிர்களைக் காப்பாற்றுவது என்பது, உங்களின் தொழில் மட்டுமல்ல; சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற சேவை. அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமத்துவம் நிலவ வேண்டும். சமத்துவம் இல்லை என்றால், அது ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியாது. பிறப்பு மற்றும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயத்தின் சமத்துவம் சீர்குலைந்து நோய்வாய்ப்பட்டிருந்தால், அதற்குத் தேவையான சிகிச்சைதான், சமூகநீதி. 

புரட்சியாளர் அம்பேத்கர் அந்தச் சமூக சிகிச்சையை, அரசியல் சட்டத்தின் மூலமாகக் கொடுத்தார். நம்முடைய தமிழ்நாட்டில் அந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர்கள் மருத்துவர்கள். முறையாக மருத்துவம் படித்து மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் பிட்டி.தியாகராயருடன் இணைந்து நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கி, சமூகநீதி என்ற சிறப்பான சிகிச்சையை சமுதாயத்திற்குத் தந்தார்கள். அந்த சிகிச்சையைப் பனகல் அரசர் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்.

தந்தை பெரியார் அந்தச் சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றினார். நெடுங்காலமாகச் செல்லரித்துப் போயிருந்த பகுதிகளைப் பெரியார் அகற்றினார். புதிய ரத்த அணுக்கள் உருவாகிற வகையிலான சிகிச்சையைப் பேரறிஞர் அண்ணா வகுத்தளித்தார். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, நோயற்ற நலமான சமூகத்தைப் படைத்தார் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவுக்கே சமூகநீதி சிகிச்சையை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலம் கிடைக்கச் செய்தவர் கருணாநிதி. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் ‘இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு‘ சமூகநீதி என்ற சிகிச்சையை வழங்கியவர் வி.பி.சிங்.

தன்னுடைய ஆட்சியே பறிபோனாலும் சமூகநீதிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நின்ற அந்த பெருமகனாரைப் போற்றுகிற வகையில் அவரின் திருவுருவச் சிலையை இந்தியாவிலேயே முதன்முறையாக நம்முடைய தமிழ்நாட்டின் தலைநகரான இந்தச் சென்னையில் நாளை திறந்து வைக்கப் போகிறோம். இது நம்முடைய திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்த பெருமை. இந்தப் பெருமையும் பெருமிதமும் இருக்கும் அதேசமயம், நமக்கு முன்பு இருக்கும் சவால்களையும் உணர்ந்துதான் இருக்கிறோம்.

மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதிக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்கொள்கிறோம். இந்தச் சவால்கள் அனைத்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைப்பதோடு, மருத்துவம் படித்து, டாக்டர்களாகிச் சமுதாயத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பாழாக்குகிறது.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலைமை மருத்துவமனைகள், நகரங்கள் எல்லாவற்றிலும் அரசு பொது மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.

அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும், கருணாநிதி உருவாக்கிய கட்டமைப்புகளைத் தவிர்க்க முடியாமல், வளர்த்தெடுத்தார்கள். இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் போதுமான அளவில் இல்லாத சூழலில், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்‘ - குக்கிராமம் வரை சிறப்பான பொது மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதை இந்தத் துறையின் வல்லுநர்கள் பலர் சுட்டிக் காட்டியிருப்பதோடு, தமிழ்நாட்டின் திராவிட மாடலை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று வாதாடியபோது, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்களான நீங்கள் அனைவரும் ஆதரவாக நின்றீர்கள். அந்தச் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றோம். அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழுகிற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவப் படிப்பை உறுதி செய்தோம்.

பொது நுழைவுத்தேர்வு முறையை 2007-ஆம் ஆண்டு முழுமையாக ரத்து செய்து, அதற்கான சட்ட ஏற்பையும் குடியரசுத் தலைவர் மூலமாகப் பெற்றவர் கருணாநிதி. டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி மூலமாக, உரிய தரவுகளைச் சேகரித்து, கருணாநிதி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான், +2 மதிப்பெண் அடிப்படையில், கிராமப்புற - ஏழை எளிய – பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் டாக்டர் ஆக முடியும் என்ற நிலை உருவானது. அதனால்தான், பன்னோக்கு மருத்துவமனைகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரைக்கும், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இந்தக் கட்டமைப்பை சிறப்பாகக் கையாண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்போடு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் ஒப்பிடவே முடியாது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில்தான் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்திருக்கிறது என்பதை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுதி, The Dravidian Model of Public Health என்ற கட்டுரையில் பேராசிரியர் சக்திராஜன் ராமநாதன் அவர்களும் பேராசிரியர் சுந்தரேசன் செல்லமுத்து அவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

மக்கள் நல்வாழ்வுத்துறையில், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் நடைமுறைகளை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றினால், சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு, “தகுதி மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றிய பரந்த புரிதல் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது“ என்றும் எழுதியிருக்கிறார்கள்.

இதைத் தனிப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கான பாராட்டுப் பத்திரமாக நான் கருதவில்லை. சமூகநீதியை எல்லாத் துறைகளிலும் நிலைநாட்டுகிற நோக்கத்தின் நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் திராவிட இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்தின் தோளோடு தோள் நிற்கும் சமூகநீதி இயக்கங்களுக்குமான ஒட்டுமொத்த பாராட்டாகத்தான் கருதுகிறேன். இப்படிப்பட்ட பாராட்டுகள், நம்முடைய மகிழ்ச்சியை அதிகமாக்கி, நாம் இன்னும் சிறப்பாக செயல்படத் தூண்டுகோல் ஆகிறது. மக்களுக்கு நல்ல - தரமான சிகிச்சையைத் தருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில்,

*  மக்களைத் தேடி மருத்துவம்

* இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48

* புதுப்பிக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டம்

* விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

நாம் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா இரண்டாவது அலை மோசமாக இருந்தது. அப்போது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது‘; ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து எடுத்த சுகாதார நடவடிக்கைகளால் மக்கள் கொஞ்சம் நாளிலேயே எவ்வளவு நம்பிக்கையோடு நடமாடத் தொடங்கினார்கள் என்று நமக்கும் தெரியும்; நாட்டுக்கும் தெரியும். 

உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் – மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகின்றன. அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகள், பொதுமக்களைச் சோதனை எலிகளாக மாற்றிடும் அபாயம் கொண்டவை. இந்தியா சோதனை எலியாக மாறிடுமோ என்ற அச்சம் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த உங்களிடம் இருப்பதை உணருகிறேன்.

ஏன் என்றால், மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் Mixopathy (மிக்ஸோபதி), ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதால் அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமையுணர்வோடும் இந்த மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. மருத்துவர்களான உங்களின் அறிவுப்பூர்வமான – உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை நாம் உறுதியோடு முன்னெடுத்திருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஒன்றிய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

அதுபோலவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளும் எதேச்சாதிகாரப் போக்கை மேற்கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக சமூக சமத்துவ டாக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இது உங்கள் போராட்டம் இல்லை, எங்கள் போராட்டம்! தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! அந்த உரிமைப் போராட்டத்தில் எப்போதும் துணைநிற்போம். நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம்.

ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சையை முடித்து, நோயாளியின் இதயத்துடிப்பு உள்ளிட்டவை சீராக இருக்கிறதா என்று ஐ.சி.யூ வார்டில் கண்காணித்து, அதற்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றி, பின்னர் டிஸ்சார்ஜ் செய்வதற்கு எவ்வாறு உங்களுக்கு நேரம் தேவைப்படுகிறதோ – அதுபோல மருத்துவக் கட்டமைப்பையே நோயாளி ஆக்கியவர்களிடம் இருந்து மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள். உங்களின் அடுத்த மாநாடு வெற்றி மாநாடாக அமைய வாழ்த்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

click me!