சசிகலா வெளியேறிய நேரம்... முக்குலத்தோரை அழைத்த ஜெயலலிதா... மனம் நொந்த உதவியாளர்..!

By vinoth kumarFirst Published Sep 30, 2021, 11:30 AM IST
Highlights

மறுநாள் மாலை கழகத்தினரை அம்மா அவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இருந்தது. அம்மா அவர்கள் சந்திப்பு அறைக்கு வந்தவுடன், என்னை அழைத்தார்கள். உள்ளே சென்றேன். இவரை அழைத்து வா என்றார்கள். நானும் அவரை அழைத்துவர  திரும்பிய போது, பூங்குன்றன் நேற்று சொன்னது உனக்கு இல்லை, புரிகிறதா? என்றார்.

அம்மாவிடம் வேலை பார்த்தது தெய்வத்திடம் வேலை பார்த்ததற்கு சமம் என்பதை அம்மாவின் மறைவிற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகள் மெய்ப்பிக்கவே செய்கின்றன என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பக்கத்தில்;- அம்மாவிடம் வேலை பார்த்தது தெய்வத்திடம் வேலை பார்த்ததற்கு சமம் என்பதை அம்மாவின் மறைவிற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகள் மெய்ப்பிக்கவே செய்கின்றன. சின்னம்மா அவர்கள் வெளியேறிய நேரம். முக்குலத்தோரில் நான் மட்டுமே அம்மாவிற்கு அருகில் இருந்தேன். என்னை எப்போது அம்மா அவர்கள் வெளியேற்றுவார்கள் என்று பலரும் ஏன்? நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது! 

தலைமைச்செயலகம் சென்று போயஸ் கார்டன் திரும்பிய அம்மா, டைனிங் ஹாலில் இருந்து கொண்டு என்னை அழைத்தார்கள். அம்மாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். நானும் அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றேன். அப்போது அம்மா அவர்கள் முக்குலத்தோரை சேர்ந்த தனி பாதுகாவலர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பிவிடுங்கள். உங்கள் ஊரிலிருந்து உங்க இனத்தை சேர்ந்த நல்ல ஆட்களை தேர்வு செய்து அழைத்து வாருங்கள் என்றார். எனக்கு இதைக் கேட்ட போது அங்கு நிற்பதா? இல்லை வெளியில் சென்று விடுவதா? ஒரே குழப்பம். மனம் முழுவதும் இருண்டுவிட்டது. நம்மையும் அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவே என் உள்ளம் உணர்த்தியது. தகவலை சொல்லிவிட்டு அம்மா அவர்கள் மேலே சென்று விட்டார். அன்றிரவு எனக்கு நரகமாக நகர்ந்தது.

மறுநாள் மாலை கழகத்தினரை அம்மா அவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இருந்தது. அம்மா அவர்கள் சந்திப்பு அறைக்கு வந்தவுடன், என்னை அழைத்தார்கள். உள்ளே சென்றேன். இவரை அழைத்து வா என்றார்கள். நானும் அவரை அழைத்துவர  திரும்பிய போது, பூங்குன்றன் நேற்று சொன்னது உனக்கு இல்லை, புரிகிறதா? என்றார். 1000 வாட்ஸ் வெளிச்சம் மனம் முழுவதும் பரவியது. அம்மாவைப் பார்த்து லேசான புன்னகையோடு நானும் வெளியேறினேன். எப்படிப்பட்ட தலைவி! என் மனம் நோகக்கூடாது என்று சிந்தித்து இன்று இதைச் சொல்லி இருக்கிறார். இரும்புப்பெண்மணிக்கும் உருகும் இதயம் தானோ! இறைவா! எப்படிப்பட்ட அற்புத தலைவியுடன் இந்த அடியேனையும் பயணிக்க வைத்தது நீர் எனக்கு தந்த புதையல் தானே! அன்று எனக்கு ஒரே சந்தோஷம். 

என்னையும் அனுப்பினால் முக்குலத்தோரின் விசுவாசம் எள்ளி நகையாடப்படும் என்று மனம் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது. அன்று இறையருளால் அதை மீட்டெடுத்த பெருமை என்னை கர்வம் கொள்ளவே செய்தது. பசும்பொன் மகான் வாழ்க! என்று சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவர் ஜெயந்திவிழாவை கொண்டாடுவதற்கு ஆகும் செலவை யாரிடமும் கேட்காமல் அவருடைய வாரிசுதாரர்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு சிரமத்தில் இந்த விழாவை நடத்துகிறார்கள் என்று உடனிருந்து தெரிந்து கொண்டேன். வேதனைப்பட்டேன். அந்த விழாச் செலவை யாரும் கேட்டு கொடுக்க இதுவரை முன் வரவில்லை என்பதே வேதனை. அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கொடுப்பது உங்கள் கடமை அல்லவா! அம்மாவிடம் அரசியல் பயின்ற நான் சார்ந்த சாதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் ஒரே சாதிதான்! என பதிவிட்டுள்ளார்.

click me!