ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது..!

By vinoth kumarFirst Published Sep 13, 2021, 12:15 PM IST
Highlights

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.  அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் பழனிகுமார் வெளியிட உள்ளார்.

click me!