நீங்க ரொம்ப லேட்டுங்க.. மாணவன் தனுஷ் தற்கொலையில் திமுகவை விமர்சித்த சரத்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 13, 2021, 12:00 PM IST
Highlights

மாணவன் தனுஷின் தற்கொலை வேதனை அளிக்கிறது, நீட் தேர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

மாணவன் தனுஷின் தற்கொலை வேதனை அளிக்கிறது, நீட் தேர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின்  19 வயதான மகன் தனுஷ், கடந்த  2019 -ல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், இரண்டு வருடமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாததால், இந்த ஆண்டு தேர்வு எழுத தயாராகி வந்தவர் தேர்வு பயம் விரக்தியால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளித்துள்ளது. 

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்த அரசு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் துரிதமாக தீர்மானம் கொண்டுவந்து. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும், பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில் நீட் தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்ற மத்திய அரசின் பிடிவாதத்தால், மாணவ மாணவியர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த அவல நிலைகள் மாறும்,  உயிரிழப்புகளை தவிர்க்கவும் மத்திய மாநில அரசுகள் நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்பது சமூகத்திற்கு நான் தொடர்ந்து வழங்கி வரும் அறிவுரை.

இறைவன் அருளால் உலகில் வாழ்வதற்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பெற்றோர்களையும், மற்றவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி உலக வாழ்வைத் துறந்து செல்லும் விபரீத முடிவை எடுப்பது ஏற்புடையதல்ல, தேர்வில் தோற்பது வாழ்வில் தோற்பது ஆகாது என்பதை ஆசிரியர்கள் மாணவர்களிடம் அழுத்தமாக எடுத்துக் கூறி வாழ்வை வளமாக்கும் பல வழிகளையும் போதிக்க வேண்டும் என வேண்டுகிறேன். சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்தால் அதை உடனடியாக செய்வது நல்லது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!