தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜகவில் நிலை என்ன என கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஒன்று 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்கிற மிக மோசமான எதேச்சாதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு - மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் என தெரிவித்தார்.
ஒன்றுக்கு ஆதரவு.. ஒன்றுக்கு எதிர்ப்பு
இந்த தீர்மானத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்யப்படுவது தொடர்பானது. நிச்சயமாக ஒட்டுமொத்தாக பறவை பார்வை பார்க்கும் போது தென் மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கை , மக்கள் தொகை கட்டுப்படுத்துவதாலும் சிறப்பான இடத்தை அடைந்துள்ளார்கள். வரும் காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் போது நமக்கான குரல் அங்கு ஒலிக்க வாய்ப்பு மறுக்கப்படுமோ என்கிற அச்சம் நியாயமானது. பாஜக தீர்மானத்தை பொறுத்துவரை கவலையை அக்கறையை புரிந்து கொள்கிறோம் எனவே எந்த இடத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை முழுமையாக புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தீர்மானம் அவசியமற்றது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுகவில் நிலை என்ன.?
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனவே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட தமிழக அரசு கொண்டுவந்துள்ள தனி தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் ஆதரவை தெரிவிக்கிறோம் என கூறினார். அடுத்ததாக ஒரு நாடு ஒரு தேர்தல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பேசிய கன்னியாகுமரி தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசுவையில், ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிடம் அளித்துள்ளோம்.
தீர்மானத்தை ஆதரித்த அதிமுக
அதில் தேர்தல் நடத்துவதற்கான செலவு குறைவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்போம், இல்லையெனில் அப்போது தங்களது முடிவை தெரியப்படுத்துவோம் எனவும் அதிமுக சார்பாக தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்