இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசு என்னென்ன செய்தது..? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

Published : Aug 29, 2021, 08:36 PM IST
இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசு என்னென்ன செய்தது..? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

சுருக்கம்

இலங்கைத் தமிழர்களுக்கு பாஜக அரசு என்னென்ன செய்தது என்பது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நலனை பாதுகாக்க, தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் மோடிதான். பிரதமர் இலங்கைக்கு சென்றபோது, மலையகத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்துவைத்தார். இந்தியாவின் உதவியுடன் இலங்கையின் வடகிழக்கு பகுதிக்கு குடிபெயர்ந்த தமிழர்களுக்காக 50,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மலையகத் தமிழர்களுக்காக 4,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவியது.


ரூ.147.81 கோடி நிதி உதவியுடன், ஆரம்பத்தில் 297 ஆம்புலண்ஸ் வாங்கப்பட்டது மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் முதலுதவி நிபுணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் இலங்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், நாடு முழுவதும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த இலங்கைக்கு 109 கோடி இந்திய அரசு கூடுதலாக வழங்கியது. இதன்மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்து நிறுவப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட கலாச்சார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகள் பிரச்னையில் மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மீனவர்கள் பிரச்னையை தீர்க்க, இரு நாடுகள் சார்பில் 2 + 2 கூட்டு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இலங்கை தமிழர்கள் சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க இந்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து பேச்சுவார்த்தை உள்ளது. தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை பிரதமர் தலையிட்டு விடுவிக்க கோரியதன் அடிப்படையில், அவர்கள் ஐவரும் உடனடியாக வீடு திரும்பினர். 
கடந்த பிப்ரவரியில் 9 மீனவர்களும், மார்ச்சில் 40 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். கூட்டு பணிக்குழுவின் முயற்சியால், இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூடு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு உள் அதிகாரப் பகிர்வு குறித்த இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது பிரிவை திருத்துமாறு இலங்கை அரசுக்கு தனிப்பட்ட முறையில் வலியுறுத்தப்பட்டது” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!