தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக விலகுது.. கொடநாடு விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சி.. ஜி.கே.வாசன் அதிரடி.!

By Asianet TamilFirst Published Aug 29, 2021, 8:16 PM IST
Highlights

கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது திமுக அரசு. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தும் திமுக விலகுகிறது என்றே நாங்கள்  கருதுகிறோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
 

வேலூரில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் போட்டியிட வாய்ப்பை பெற வேண்டும் என்பது பற்றியும் மற்ற பகுதிகளில் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற எப்படி பணி செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். அகில இந்திய அளவில் விவசாயிகளின் நீண்ட கால நலனை கருத்தில் கொண்டே வேளாண் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. விவசாயிகளின் பிரச்னையை அரசியல் பிரச்னையாக்குகிறார்கள். இன்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய பயன்களை தடுக்கின்றனர்.

 
பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் ஓராயிரம் பேரின் போராட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் நஷ்டம் அடைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நலன்கள் தடைபடுகின்றன. கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தில் உள்ளன. கர்நாடக அரசு அணை கட்ட வலியுறுத்தக்கூடாது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்காது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ப கர்நாடக அரசு நடக்க வேண்டும். 
தமிழக அரசு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும். அதில் ஈடுபட்டு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது திமுக அரசு. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தும் திமுக விலகுகிறது என்றே நாங்கள்  கருதுகிறோம்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
 

click me!