
பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் தி.மு.க. அண்ணாவிடம் அவர் பேச வேண்டிய சூழல் குறித்து ஜஸ்ட் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் போதும் மணிக்கணக்கில் அர்த்தம் பொதிய பேசி பின்னியெடுப்பார். அவரின் வழிவந்த கருணாநியும் அப்படியேதான்.
ஒரு வார்த்தை அல்ல ஒரு எழுத்து கிடைத்தாலும் போதும் அதை வைத்து சுற்றி சுற்றி ஜடை பின்னி பூவும், பொட்டும் வைத்து பேச்சில் பொளந்துவிடுவார். கலைஞரின் பேச்சில் கருத்து செறிவு மட்டுமில்லை கலகலப்பும் மிஞ்சியிருக்கும்.
அவரின் வாரிசான ஸ்டாலினின் பேச்சில் புள்ளிவிபரங்கள் அதிகமிருக்கும் எப்பதாவது புன்னகைக்கும் அங்கே இடமிருக்கும். அண்ணாவும், கலைஞரும் ஒரு மாவட்ட கூட்டத்தில் பேசிவிட்டு மறு கூட்டத்திற்கு செல்ல காரிலோ அல்லது ரயிலிலோ பயணிப்பார்கள்.
இரு கூட்டங்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்கும். இந்த நேரத்தில அடுத்த கூட்டத்தின் சப்ஜெக்டை பற்றி விரிவாக கேட்டு தங்களை தயார் செய்து கொள்வார்கள். ஆனால் இன்று சுடச்சுட சூறாவளி அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்டாலினோ காலையில் மதுரை, மாலையில் நாகை, இரவில் சென்னை என்று பறந்து கொண்டே இருக்கிறார்.
தரை இறங்கியதும் தான் செல்லக்கூடிய இடம், பேசக்கூடிய சூழல் குறித்து விமான பயணத்தின் போதே கேட்டுத்தெரிந்து அதற்கு தயாராகும் அதே நேரத்தில், விமான நிலைய வாசலில் மைக்கோடு நிற்கும் செய்தியாளர்களுக்கு கரெண்ட் அரசியல் பற்றியும் கமெண்ட்களை உதிர்க்க வேண்டும்.
சென்னையில் ஸ்டாலின் விமான நிலையத்தினுள் நுழையும் போது இருந்த அரசியல் சூழல் அவர் மதுரையில் தரையிறங்குவதற்குள் தலைகீழாக கூட மாறியிருக்கும். ஆக இது மிக இக்கட்டான சவால். காலமும் மாறிவிட்டது ஒரு நிகழ்வு நிகழ்ந்த அடுத்த நொடியில் வாட்ஸ் அப் மற்றும் லைவ் சேனல்கள் மூலம் உலகமெங்கும் ஒவ்வொரு செய்தியும் பரவி விடுகிறது.
விமான பயணத்தின் போது மொபைல் போன்றவை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டியது அவசியமென்பதால் விமானத்திலிருந்து கீழிறங்கிய நொடியிலிருந்து தரவுகளை மளமளவென அப்டேட் செய்யும் ஸ்டாலின் செய்தியாளர்களை மிக தெளிவாக எதிர்கொள்கிறார். இந்நிலையில் இன்று திருச்சி தென்னூரில் உள்ள ஆலயத்தில் தி.மு.க. சார்பில் நடக்கும் துர்வாரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் கோயிலான அந்த கோயிலை ‘அறநிலையத்துறை கோயில்.’
என்றும் ‘எழுபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் தூர் வாரப்பட்டதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்’ என்று தவறுதலாக சொல்லிவிட்டார். பின் பக்கத்தில் இருந்தவர் அதை சரி செய்ய, ‘மன்னிக்கவும், மன்னிக்கவும்’ என்று ஒவ்வொரு தவறுக்கும் இரண்டு மூன்று முறை மன்னிப்பு கேட்டு சரி செய்தும் கொண்டார்.
எப்போது எதை கேட்டாலும் சலனமேயில்லாம சரவெடி பதிலை தரும் தளபதி இன்று சற்றே தடுமாறியதை கண்டு அவரது அருகிலிருந்த கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் சற்றே அதிர்ந்துவிட்டனர்.
தாறுமாறான திருச்சியின் வெயில் தளபதியை தடுமாற வைத்துவிட்டதோ?