
புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல, இதுவரை அடக்கியே வாசித்து வந்த திமுக, கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு விஸ்வரூபம் எடுக்க திட்டமிட்டுள்ளது.
நம்மால் ஆட்சி கலைந்து விட கூடாது என பொறுத்திருந்தோம், ஆனால் இதுவரை “பொறுத்தது போதும்.., பொங்கி எழு மனோகரா” என ஸ்டாலினே திமுக எம்.எல்.ஏ க்களுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்.
கலைஞரின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவது, சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்துவது என இரண்டு தீர்மானங்கள் மட்டுமே, அறிவாலயத்தில் நேற்று நடந்த எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தற்போது, சட்டசபையை கூட்டினால், தேவை இல்லாத நெருக்கடியும், கலைஞருக்கு புகழ் பாட வேண்டிய நிர்பந்தமும் உருவாகும் என்ற காரணமாகவே, சட்டப்பேரவை கூட்டப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில், தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. யார் எந்த பக்கம் போவார்கள்? என்று தெரியாமல் இருப்பதால், எடப்பாடி ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கு கடுமையாக போராடி வருகிறார்.
மறுபக்கம், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், பொது மக்கள் எடப்பாடி அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். எடப்பாடி பக்கம் எத்தனை எம்.எல்.ஏ க்கள் நிற்பார்கள் என்று தெரியாததால், ஆட்சியே கவிழும் சூழல் உருவாகலாம்.
அதன் காரணமாகவே, திமுக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வந்தாலும், எடப்பாடி சட்டமன்றத்தை கூட்டுவதற்கு தடையாக இருந்து வருகிறார் என்று திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதனால், சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி, கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்று, எம்.எல்.ஏ க்கள் பலர் கூறி உள்ளனர்.
ஆனால், எதுவாக இருந்தாலும், கலைஞர் பிறந்த நாளை, பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டு, அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று மூத்த எம்.எல்.ஏ க்கள் அவர்களை சாந்தப்படுத்தி உள்ளனர்.
பின்னர் பேசிய ஸ்டாலின், கலைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அனுமதி அளித்தால், அவரது பிறந்த நாளில், அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்வோம் என கூறியிருக்கிறார்.
மேலும், ஆட்சியை கலைக்க இதுவே சரியான தருணம். எனவே, கலைஞர் பிறந்த நாள் முடிந்த பின்னர், கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என்றும் ஸ்டாலின் பச்சை கொடி காட்டியுள்ளார்.
ஆகவே, ஜூன் 5 ம் தேதிக்கு பிறகு, விஸ்வரூபம் எடுக்கப்போகும் திமுகவை எடப்பாடி அரசு எப்படி சமாளிக்க போகிறது? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.