ஹிட்லர், முசோலினிக்கு நடந்ததுதான் நடக்கப்போகுது... கே.எஸ்.அழகிரிக்கு வந்த கோபம்..!

By Asianet TamilFirst Published Aug 12, 2021, 9:42 PM IST
Highlights

உலக வரலாற்றில் ஹிட்லர், முசோலினியின் சர்வாதிகாரத்தை அறிந்திருக்கிறோம். அத்தகைய சர்வாதிகாரிகளின் இறுதி காலம் எப்படி முடிந்தது என்பதை அனைவரும் அறிவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கான உரிய அரங்கமாக இந்திய நாடாளுமன்றம் திகழ்ந்து வருகிறது. சமீபத்தில், நாட்டையே உலுக்கி வருகிற பெகாசஸ் மென்பொருள் மூலமாக அரசியல் தலைவர்களின் செல்பேசிகளை ஒட்டுக் கேட்டது மற்றும் விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள பாஜக அரசு தயாராக இல்லை. இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜனநாயகத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கக் கூட உரிமையற்ற நிலையில் நாடாளுமன்றம் அமைந்திருக்கிறது. இதைவிட ஜனநாயக படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது.


சமூக ஊடகங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றின் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் நாள்தோறும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர். தலைநகர் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்டு, பெற்றோரின் சம்மதம் இல்லாமல் எரிக்கப்பட்ட 9 வயது தலித் சிறுமியின் குடும்பத்தினரை, தலைவர் ராகுல் காந்தி சந்தித்து, அதை புகைப்படத்தோடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் அவரது ட்விட்டர் பக்கத்தையும் முடக்கிவிட்டது. இதை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாக கண்டித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான இந்திய தேசிய காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ரோகன் குப்தா, அஜய் மக்கான், மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ்சிங் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டன. இத்தகைய போக்கின் மூலம் பாஜக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எந்த பதிவும் வெளிவரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.
உலக வரலாற்றில் ஹிட்லர், முசோலினியின் சர்வாதிகாரத்தை அறிந்திருக்கிறோம். அத்தகைய சர்வாதிகாரிகளின் இறுதி காலம் எப்படி முடிந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். அதைப் போல, ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மிருகபல பெரும்பான்மையோடு ஒரு சர்வாதிகாரியாக தமது அதிகார பலத்தை வைத்துக் கொண்டு எதேச்சதிகாரமாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். நமது அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், நம்மை பொறுத்தவரை பிரதமர் மோடி, அமித்ஷா தவிர, வேறு எந்த அமைச்சர்களும் மக்களின் பார்வைக்கு தென்படவில்லை. மத்திய அரசில் அதிகாரக் குவியல் என்பது பிரதமர் அலுவலகத்தில் இருப்பது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால் ஆகும்.
எனவே, கருத்து சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையாகும். அதன் அடிப்படையில், சமூக ஊடகங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிடுகிற உரிமையை பறிக்கிற மோடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய முயற்சிகளின் மூலமே மோடியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முடியும்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 

click me!