சசிகலாவுக்கு புதிய சிக்கல்? முன்னாள் சிறை அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு..!

Published : Aug 12, 2021, 05:21 PM IST
சசிகலாவுக்கு புதிய சிக்கல்? முன்னாள் சிறை அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு..!

சுருக்கம்

சிறையில் இருந்த போது லஞ்சம் கொடுத்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் சசிகலாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் சிக்கிய அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் வீட்டில் கர்நாடக ஊழல் ஒழிப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 2018ம் ஆண்டு சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா மற்றும் எஸ்.பி.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதை நிரூபிக்கும் வகையில் அப்போதைய சிறைத்துறை டிஜிபி ரூபா சசிகலா அறையில் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினார். அவற்றை மாநில அரசிடம் ஒப்படைத்தார்.  அதில், தண்டனை கைதி சசிகலாவிடம் இருந்து சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா, எஸ்.பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று கொண்டு சொகுசு வசதிகள் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். 

இதை ஏற்ற மாநில அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைத்து விசாரித்தனர். இதில், சசிகலா லஞ்சம் வழங்கியது உண்மைதான் என்பது உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கு ஊழல் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக  ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், முறையான ஆதாரங்களின் பேரில் பரப்பன அக்ரஹாரா  சிறைத்துறை முன்னாள் எஸ்.பி.கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில்  நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

தற்போது அவர் பெலாகாவி மத்திய சிறைச்சாலையில் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். பெலாகாவியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். மதியம் தொடங்கியஇந்த சோதனை மாலை வரை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சசிகலாவிடம் இருந்து பெற்றப்பட்ட லஞ்சப்பணம் தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் மூலம் வாங்கி சொத்துகள் தொடர்பான ஆவணங்களை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிறையில் இருந்த போது லஞ்சம் கொடுத்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் சசிகலாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!