
ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம்; இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? என மநீம தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக பாஜகவை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம், திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது’’ என அவர் தெரிவித்துள்ளார்.