இந்தி பேசாத மாநில மக்கள் இந்தி மொழியை கற்றிருப்பார்கள். ஆனால், மற்ற மொழிகளை கற்க காங்கிரஸ் அரசும், திராவிட மாடல் அரசுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற திருக்குறளை திருமதி. கனிமொழி இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு, நீங்கள் (வட இந்தியர்கள்) தென் இந்திய மொழிகள் எதையும் கற்பதற்கு முயற்சிக்க கூட இல்லை என்றும், ஹிந்தியை தென் இந்திய மக்களின் மீது திணிப்பதற்கு மட்டுமே முயற்சித்தீர்கள் என்றும், தென் இந்திய மொழிகள் உங்கள் யாருக்கும் புரியவில்லை என்றும் கூறியது சரியே. ஆனால், அதற்கு காரணம் யார் ? காங்கிரஸ் கட்சியே. எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கூறிய அவர், மும்மொழி கொள்கை என்பது இந்தி பேசும் மாநில மக்கள், ஆங்கிலம் உட்பட தென் இந்திய மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநில மக்கள், தாய் மொழி மற்றும் ஆங்கிலம் உட்பட இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கொண்டு வரப்பட்டது. அதை முறையாக செயல்படுத்தியிருந்தால், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள், தென் இந்திய மொழி ஒன்றினை கற்றிருப்பார்கள். இந்தி பேசாத மாநில மக்கள் இந்தி மொழியை கற்றிருப்பார்கள். ஆனால், மற்ற மொழிகளை கற்க காங்கிரஸ் அரசும், திராவிட மாடல் அரசுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க..திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்
அறுபது வருடங்களுக்கு மேல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தென் இந்திய மொழிகளை வட இந்தியர்கள் கற்றுக்கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில்,மூன்று தலைமுறையினரை கெடுத்து குட்டி சுவராக்கிய பெருமை காங்கிரஸ் மற்றும் தி மு கவினரையே சாரும்.எங்கள் தமிழை இந்தியா முழுவதும் கற்று கொடுக்க வேண்டும் என தி முக வலியுறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதா?மூன்றாவது மொழியாக தென் இந்திய மொழிகளை கற்க வேண்டும் என காங்கிரஸ் அரசு வலியறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூன்றாவது மொழி ஒன்றை கற்று தர வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இந்தி கற்று கொடுக்க வேண்டும் என்றும், தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தி வருகிறது. இதை முன்னெடுத்து தமிழக அரசு, தமிழ் மொழியை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டமிடுதலை செய்திருக்கிறதா? தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் (குறைந்தது இந்தியாவில்) பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடிய மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சியை மேற்கொண்டதா திராவிட முன்னேற்ற கழகம் ? ஒட்டு மொத்தமாக மூன்று தலைமுறை இந்தியர்களை தமிழை கற்க விடாமல் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை வைத்து கொண்டு திமுகவின் கனிமொழி அவர்கள் பேசுவது வெட்கக்கேடு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு செய்யும் மாபெரும் துரோகமும் கூட.
அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு இன்று தமிழ் பெருமை பேசுவது முறையா கனிமொழி அவர்களே? தேசிய கல்வி கொள்கையில் தாய் மொழிக்கே அதிக முன்னுரிமை அளிப்பது பாஜக! அதை ஏன் எதிர்க்கிறது திமுக? தமிழ் மொழி இந்தியா முழுவதும் பரவி விடக்கூடாது என்று ஏன் திமுக நினைக்கிறது ? மலிவான மொழி அரசியல் இது தானே? நம் தமிழ் மொழியை விட காங்கிரசின் கூட்டணி தான் முக்கியம் என்ற குறுகிய நோக்கம் கொண்டது தானே திமுக ? என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்