தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றியது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் காத்திருக்கவைத்தது, சட்டசபையில் ஆளுநர் உரையில் கூடுதல் தகவல் சேர்த்தது, செந்தில் பாலாஜி அமைச்சரவை நீக்கம் போன்ற விவகாரங்களில் தமிழக அரசோடு மோதல் போக்கில் ஈடுபட்டிருக்கும் ஆளுநர் ரவி, இது போன்ற பல்வேறு விவகாரங்களில் திடீரென பின்வாங்கியும் உள்ளார்.
ஆளுநர்-தமிழக அரசு மோதல்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் ஆளுநர் ரவியோடு மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. முதலில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காத்திருப்பில் வைத்ததில் தொடங்கிய பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டே உள்ளது. நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பிவைத்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானோர் தொடர்ந்து தற்கொலை செய்தி கொண்டிருந்த நிலையில், இதற்காக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகமா.? தமிழ்நாடா.?
ஆனால் இதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து மீண்டும் தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த மசோதாவை தன்னால் நிராகரிக்கமுடியாத காரணத்தால் ஒப்புதல் அளித்தார். மேலும் பல ஆண்டு காலமாக தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை, தமிழகம் என ஆளுநர் மாற்றினார். ஆளுநர் மாளிகை குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் எனவும், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது. இதற்க்கு தமிழக அரசு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனது முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் வெளிநடப்பு
இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரையில், தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை படிக்காமல் கூடுதல் வார்த்தைகளை சேர்த்தும், வார்த்தைகளை நீக்கியும் ஆளுநர் ரவி படித்தார். இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர், ஆளுநர் முன்னிலையிலேயே ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் உரையை தவிர்த்து ஆளுநர் கூடுதலாக சேர்த்த வார்த்தைகள் நீக்கப்பட்டது. இதனால் ஆளுநர் ஒன்றும் செய்ய முடியாமல் கூட்டதில் இருந்து பாதியில் வெளியேறினார். அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லையென தகவல் வெளியானது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சான்றிதழல் கிடைக்கவில்லையென கூறப்பட்டது.
செந்தில் பாலாஜி பதவி நீக்கம்
இதனை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் அடுத்தடுத்து பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் ரவி தேதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ரவி உத்தரவிட்டார். ஆளுநருக்கு சட்ட விதியில் அதிகாரம் இல்லாத நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு வழிவகுப்பதாக கூறப்பட்டது. மேலும் ஆளுநரின் அறிவிப்பு அனைத்து மாநில ஆளுநருக்கும் முன் உதாரணமாக அமைந்து விடும் என கூறப்பட்டது. இந்தநிலையில் தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து ஆளுநர் தனது முடிவு பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது
இதையும் படியுங்கள்