
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு, மதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதன் பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக, ஆளுநர் மூலமாக நேரடியாகவே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நூறாண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்கத்தை தகர்க்க இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்கின்றன என்றார்.
தமிழகத்தின் உரிமைகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் திராவிட இயக்கத்தையும் காக்க வேண்டிய வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுவதாகவும் வைகோ கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு, மதிமுக ஆதரவு அளித்தது குறித்து திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்திருந்தார். அதேபோல் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பது குறித்து சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும்போது, திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது குறித்து பேசிய துரைமுருகன், ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறினார்.
பேனர் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை என்றும், இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார். கன்னியாகுமரியில் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, அரசாங்கம் என்று ஒன்று இருந்தால்தானே மழை பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றும் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.