
ஒக்கி புயல் போட்டுத் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டமே கதறிக் கிடக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்களை காணவில்லை என்று கடலோர குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. அரசு தரப்பிலிருந்து உதவிக்கரம் அப்படியொன்றும் சிறப்பாய் நீண்டுவிடவில்லை என்று! மக்கள் குறைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கு குறையொன்றும் வைக்கவில்லை தமிழக அரசு...என்று போட்டுத் தாக்குகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து அவர்கள் சொல்லும் விஷயங்களாவன...தமிழகமெங்கும் எல்லா மாவட்டங்களிலும் ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக ’எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’ வை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதற்காக லட்சோப லட்சங்களை அள்ளி இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவால் என்ன பயன்? என்று யாருக்கும் புரியவில்லை. இந்த விழா மேடையில் அந்தந்த மாவட்டங்களுக்கான பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று அரசுத்தரப்பு சொல்லி இதை நியாயப்படுத்தலாம்.
ஆனால்...அரசு தான் செய்ய வேண்டிய கடமைகளை, திட்டங்களை ரெகுலராக செய்ய வேண்டியது அவசியம். அதை அறிவிக்கவும், திறந்து வைக்கவும் எதற்காக ஒரு விழா, மேடையெல்லாம்?
சரி இந்த கேள்விக்கெல்லாம் அரசு பதில் சொல்லப்போவதுமில்லை, தன்னை மாற்றிக் கொள்ள போவதுமில்லை. ஆனால் சமீபத்தில் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை ஒக்கி புயல் போட்டுப் புரட்டியது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் தீவுபோல் தனித்து விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து, பயிர்களை இழந்து, தொழிலை இழந்து அநாதைகளாக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை சோற்றுக்கு கூட அரசு அல்லது தொண்டு நிறுவனங்களை கையேந்தி நிற்க வேண்டிய நிலை. மூன்று மாவட்டங்களை சேர்ந்த பல மீனவர்களை காணவில்லை என்று கதறுகிறார்கள். கேரளப் கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கும் சில உடல்கள் தமிழக மீனவர்களுடையதா? என்று ஆராயப்பட்டு வருகின்றன.
ஆக சூழல் இப்படி இருக்கும் நிலையில், அதே தமிழகத்தின் மேற்கு திசையிலுள்ள கோயமுத்தூரில் இன்று கோலாகலமாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது அரசு. இதன் ஏற்பாட்டுக்காக பல லட்சக்கில் மக்களின் பணம் கொட்டப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களாக இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். சமீப சில நாட்களாக ஆயிரக்கணக்கில் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் இங்கே முடக்கிவைக்கப்பட்டுள்ளனர். இந்த விழா நடக்கும் சமயத்தில் தமிழகத்தில் சூழ்நிலை சுகமாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை. ஆனால் அங்கே கன்னியாகுமரி மூழ்கிக் கொண்டிருக்க, குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருக்க, இங்கோ இவ்வளவு பெரிய ஆடம்பர விழா தேவைதானா? என்பதே மக்களின் கேள்வி.
இந்த விழாவுக்காக இன்று காலை சேலத்திலிருந்து கிளம்பி போலீஸ் பரிவாரம் சூழ அரசு கார்களின் ஊர்வலத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தினுள் முதல்வர் எடப்பாடியார் நுழைந்திருக்கிறார். அவரை மாவட்ட எல்லையிலேயே கோயமுத்தூர் புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் உள்ளிட்டோர் எதிர்கொண்டு பூங்கொத்துக்களை கொடுத்து வரவேற்றிருக்கின்றனர். இந்த பூங்கொத்துக்களுக்கு ஆகும் செலவில் கன்னியாகுமரியை சேர்ந்த பத்து மக்களின் பசியை ஆற்றிவிடலாமே!
இவர்களில் யாருடைய முகத்திலும் கன்னியாகுமரி பற்றிய கவலையில்லை! இவர்கள் பேச்சில் அதைப்பற்றிய வருத்தமுமில்லை. இதனால்தான் கேட்கிறோம், குமரி மூழ்குது, குழந்தைகள் அழுவுது, எடப்பாடியாருக்கு எல்லையில் கொண்டாட்டமா? என்று.
நியாயம்தானோ!?