
ஆர்.கே.நகர் தொகுதியில் நீண்ட காலமாக இருந்து வரும் முக்கிய மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவே தான் போட்டியிடுவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குகளைச் சிதற வைக்கவே, விஷால் வேட்பாளராக களமிறங்கி உள்ளதாகவும், இதற்கு பின்னணியாக தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவருக்கு எதிராகவும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களிடம் இருந்தே எதிர் கருத்துக்கள் எழுந்து வருவதாக தெரிகிறது. நடிகர் விஷால் ஏற்கனவே, நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஷால், அரசியல் பிரவேசம் செய்துள்ளது, தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சார்பற்று செயல்பட்டு வருவது தயாரிப்பாளர் சங்கம் என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் ரகசியமாக விவாதித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், நடிகர் விஷால், சென்னை, ஆர்.கே.நகர் இடை தேர்தலுக்கான நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்ததை அடுத்து அவருக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். முதலாவதாக, இந்த தொகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சனை அதிகம் உள்ளது. வெள்ளம் வரும் நேரத்தில் இந்த தொகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் நேரம் இது என்று கூறியுள்ளார்.
இரண்டாவதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் என்றும் நல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் விஷால் கூறியுள்ளார்.
மூன்றாவதாக விளையாட்டுத் துறையில் இதுவரை வெளியில் வராத திறமைகள் இந்த தொகுதி இளைஞர்களிடம் உள்ளன. எனவே விழித்தெழுந்து அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய இதுவே சரியான தருணம் என்றும் விஷால் கூறியுள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிடுவதால் எனக்கு அரசியல் லாபம் எதுவும் இல்லை என்றும், நான் ஒரு சாமானிய மனிதனாக மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை உணர்கிறேன், உறுதி செயயவும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.