நீதிமன்றம் தடை போட்ட பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு..! ஆட்சி நடத்த தகுதியே இல்லை..! துவம்சம் செய்த ராமதாஸ்..!

 
Published : Dec 03, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நீதிமன்றம் தடை போட்ட பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு..! ஆட்சி நடத்த தகுதியே இல்லை..! துவம்சம் செய்த ராமதாஸ்..!

சுருக்கம்

ramadoss condemns tamilnadu government

உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. ஆனாலும் ஒட்டுண்ணி போன்று அதிகாரத்தின் பயன்களை கடைசி நிமிடம் வரை உறிஞ்சத் துடிக்கும் அதிமுக ஆட்சியாளர்களை தமிழக மக்கள் துரத்தி அடிப்பர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலன் காக்கும் அரசு என்பதற்கான எந்தத் தகுதியும் தங்களுக்கு இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது. கோவையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் சிக்கி அமெரிக்கவாழ் பொறியாளர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றத் தடையையும் மீறி கோவை முழுவதும் பதாகைகளை அமைத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவது அதைத்தான் நிரூபிக்கிறது.

கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவினாசி சாலையை அடைத்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில், கடந்த சனிக்கிழமை அதிகாலை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அமெரிக்கவாழ் பொறியாளர் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பதாகைகளையும் அகற்ற வேண்டும்; அனுமதி பெற்ற பதாகைகளாக இருந்தாலும் அவை மக்களுக்கு இடையூறாக இருந்தால் அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஆளுங்கட்சி கோவை முழுவதும் பதாகைகளை அமைத்துள்ளது. அதுமட்டுமின்றி, விதிகளையும், நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள பதாகைகளை யாரும் அகற்றிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு பதாகைக்கும் தலா ஐந்து காவலர்களை காவலுக்கு நிறுத்தியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

கோவை மாநகர மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினாக்கள் என்னவென்றால் தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா? இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகளும், அலங்கார வளைவுகளும் தேவையா? விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த அவலச் சின்னங்களுக்கு காவல்துறையினரைக் கொண்டு பாதுகாப்பு அளித்து அவற்றுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டுமா? என்பவைதான். இவற்றுக்கு அதிமுக அரசிடம் இருந்து நிச்சயமாக பதில் கிடைக்காது.

இந்த விஷயத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும். பதாகைகளை அகற்றுவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய காவல்துறை அதற்கு நேர்மாறாக சட்டவிரோத பதாகைகளுக்கு பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் மது ஒழிப்புப் போராட்டங்களின் போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளித்தும், குடிகாரர்களுக்கு வரவேற்பு அளித்தும் தன்னைத்தானே களங்கப்படுத்திக் கொண்ட காவல்துறை, இப்போது பதாகைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம் தன்மீது மேலும் கரி பூசிக் கொண்டிருக்கிறது.

ஆட்சியாளர்களின் விதி மீறல் இத்துடன் நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது; தனியார் பள்ளி வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையும் மீறப்பட்டு வருகிறது. கோவையில் இன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கும் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்; பள்ளி வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு எந்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, இந்த விதிமீறலுக்கு அரசு எந்திரமே துணை போகிறது என்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் உண்மை.

இவை ஒருபுறமிருக்க தார்மீக அடிப்படையிலாவது இவ்விழாவை நடத்த ஆட்சியாளர்களுக்கு தகுதி உள்ளதா? ஒக்கி புயல் தாக்கத்தால் தென் மாவட்டங்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் சிதைந்து போயிருக்கின்றன. அம்மாவட்டங்களில் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், வாழை, ரப்பர் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய், எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இவற்றையெல்லாம் சரி செய்ய முதல்வர், துணை முதல்வரின் நேரடி கவனம் தேவைப்படுகிறது. அடுத்ததாக சாகர் என்று பெயரிடப்படவுள்ள புயல் சின்னம் வட தமிழகத்தை அடுத்த சில நாட்களில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் முதல்வர்தான் நடத்தி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

ஆனால், இவற்றையெல்லாம் செய்யாத தமிழக ஆட்சியாளர்கள் மக்களைப் பாதிக்கும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. ஆனாலும் ஒட்டுண்ணி போன்று அதிகாரத்தின் பயன்களை கடைசி நிமிடம் வரை உறிஞ்சத் துடிக்கும் அதிமுக ஆட்சியாளர்களை தமிழக மக்கள் துரத்தி அடிப்பர். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!