ஜஸ்ட் ஒரேயொரு தொகுதி கட்சியின் மானத்தை காக்க முயலாத பி.ஜே.பி. தலைவர்கள்: ஆர்.கே.நகரில் சிரிப்பாய் சிரித்த அவலம்...

 
Published : Dec 03, 2017, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஜஸ்ட் ஒரேயொரு தொகுதி கட்சியின் மானத்தை காக்க முயலாத பி.ஜே.பி. தலைவர்கள்: ஆர்.கே.நகரில் சிரிப்பாய் சிரித்த அவலம்...

சுருக்கம்

no one interested to participate in RK Nagar BY election

சர்வதேச அதிபர்களும் மரியாதையுடன் நோக்கும் இந்தியாவின் பிரதமர், உலகத்தின் சட்டாம்பிள்ளையான அமெரிக்காவின் எந்த அதிபரும் நட்பு காட்ட விரும்பும் நபர், இதுவரை இந்தியாவின் எந்த பிரதமரும் சேர்த்திராத சர்வதேச வல்லமையை சம்பாதித்திருக்கும் ஆளுமை என பெருமைகளை சேர்த்து வைத்திருக்கும் மோடியின் கீழ் இயங்குகிறது இந்த தேசம். 

ஆனால் அதிலடங்கும் ஒரு மாநிலமான தமிழகத்தில் ஜஸ்ட் ஒரேயொரு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட மோடியின் கட்சியான பி.ஜே.பி. நடுங்கித் தெறித்தது எனும் தகவல் எவ்வளவு பெரிய அவலம்!? ஆனால் அது உண்மை. 

மைனாரிட்டி அரசாகிவிட்ட அ.தி.மு.க. மத்திய அரசின் கைத்தாங்கலில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தேசமே அறிந்த விஷயம். இதற்கு பிராயச்சித்தமாக இந்த மாநிலத்தில் பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க.வுடன் எதிர்வரும் நாடாளுமன்ற, உள்ளாட்சி உள்ளிட்ட தேர்தல்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்பதும் தெரிந்த கதையே. 

ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த கூட்டணி  உருவாகவில்லை. காரணம், அ.தி.மு.க.வை தனியே களமிறக்கி, மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் தற்போதையை அபிமானத்தை அளவிட்டுப் பார்க்க உதவும் உரைகல்லாக இந்த தேர்தலை பார்க்கிறது பி.ஜே.பி. ஆனால் அதற்காக தாங்கள் போட்டியிடவில்லையென்றால் ’அ.தி.மு.க.வுக்கு மறைமுக ஆதரவா?’ எனும் கேள்வி உள்ளிட்ட பல விமர்சனங்கள் எழுவதை தடுக்க விரும்பியே சம்பிரதாயத்துக்கு தானும் களமிறங்குகிறது பி.ஜே.பி. இதற்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்குள் நாக்கு தள்ளிவிட்டது அக்கட்சிக்கு. காரணம் மாநில தலைவரில் துவங்கி கிளை செயலாளர் வரை யாருமே போட்டியிட தயாரில்லை என்பதுதான். 

கடந்த முறை இசையமைப்பாளர் கங்கை அமரனை களமிறக்கினார்கள். பெருமையாய் பிரச்சாரத்துக்கு போன அமரன், களத்தில்தான் ‘ஒப்புக்கு நடக்கிறது இந்த வேலை’ என்பதை புரிந்து கொண்டு அப்செட் ஆனார். நல்லவேளையாக அந்த தேர்தல் ரத்தானது. இந்நிலையில் இப்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, எங்கோ எஸ்கேப் ஆகிவிட்டார் அமரன். 

அடுத்து யாரை பிடிக்கலாம்? என்று மாநில தலைமை தவித்தபோது, ‘ஏன் நீங்களே நில்லுங்களேன்!’ என்று தமிழிசையை வம்புக்கிழுத்தது கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற தமிழக பி.ஜே.பி. ஆனால் சுத்தமாக வாக்கு வங்கியே இல்லாத இடத்தில் மாநில தலைவரை நிறுத்தி அசிங்கப்பட வேண்டுமா? என்று தமிழிசையைன் ஆதரவாளர்கள் வெளிப்படையாக முட்டுக்கட்டை போட்டு அவரை காப்பாற்றினர். ஆனாலும் அடங்காத எதிர்கோஷ்டிகள் ‘மாநில தலைவர்னா எல்லாத்தையும்தான் எதிர்கொள்ளணும். ஊருக்கு ஊர் பேட்டி கொடுக்க தெரியுதுல்ல. அப்புறம் என்ன? களமிறங்கி வாக்கு வங்கியை உருவாக்குங்க.’ என்றனர். ஆனால் தமிழிசை அடியோடு மறுத்துவிட்டார். 

இதன் பிறகுதான் மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜாவின் பெயர் அலசப்பட்டு, அவர் ஒதுங்கிக் கொள்ள. கட்டக்கடைசியாக மாநில செயலாளர் கரு.நாகராஜனை நிறுத்தியிருக்கின்றனர். 
இந்த நாகராஜன் நீண்ட காலமாக சரத்குமாரின் கட்சியில் அவரது நிழலாகவே இருந்துவிட்டு பின் பிரச்னையோடு வெளியேறியவர். 

ஆக தேசத்தையே ஆளும் பி.ஜே.பி. ஒரு மாநிலத்தின் ஒரு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட அலறியிருப்பது தமிழகத்தின் அக்கட்சியின் நிலையை தெளிவாக படம்பிடித்துள்ளது. 
தங்களை பி.ஜே.பி.யின் தூண்களாக காட்டிக் கொண்டு மத்திய அரசின் செல்வாக்கில் வலம் வரும் தமிழிசை, ஹெச்.ராஜா, வானதி, எஸ்.ஆர். சேகர், நெப்போலியன் உள்ளிட்ட யாருமே இங்கு போட்டியிட முன்வரவில்லை , கஷ்ட காலத்தில் கட்சியின் மானத்தை காக்க அவர்களுக்கு மனமில்லை என்பதை அமித்ஷாவுக்கு யார் கொண்டு போவது? என்பதைத்தான் இங்கிருக்கும் ஒன்றிரண்டு தொண்டனும் யோசிக்கிறான். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!